புதுதில்லி:
வியட்நாம் ஜனாதிபதி திரன் தாய் குவாங் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

வியட்நாம் ஜனாதிபதி திரன் தாய் குவாங் தனது மனைவியுடன் மூன்று நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படை அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்ட திரன் தாய் குவாங், தில்லி ராஜ்காட் பகுதிக்கு சென்று, அங்குள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இருநாட்டின் தலைவர்கள் முன்னிலையிலும் வியட்நாம் – இந்தியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு, ராணுவம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த நிகழ்வின்போது? செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய – பசிபிக் துணைக்கண்டத்தின் வளமையும், சுதந்திரமும் மேலோங்கும் வகையிலும், இறையாண்மையும், சர்வதேச சட்டங்களும் மதிப்புடன் பாதுகாக்கப்படும் வகையிலும் வியட்நாமும் இந்தியாவும் இணைந்து செயல்படும்” என குறிப்பிட்டார்.கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி வியட்நாம் சென்றார். அப்போது இரு நாடுகளுக்கிடையே 12 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. மேலும், இந்தியாவுடன் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக வியட்நாம் நாட்டுக்கு ரூ. 3 ஆயிரத்து 250 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அப்போது அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.