திருப்பூர், மார்ச் 2 –
வடுகபாளையம் ஊராட்சிப் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுவளவு கிளைச் செயலாளர்கள் எம்.ரங்கநாதன், ஆர்.சின்னராசு, ஆர்.அய்யம்மாள், பி.கோமதி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சி, காட்டுவளவு பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு போர்வெல் மூலம் வரும் குடிநீர், மேல்நிலைத் தொட்டியில் சேமிக்கப்பட்டு மூன்று பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர்வெல் மின்மோட்டார் பழுதடைந்ததால் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் குடிநீருக்காக இரவு பகல் பாராமல் அங்கும் இங்கும் அலைந்து சிரமப்படுவதோடு, குடிநீர் விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதனால் வேலையிழப்பும், வருமானம் இழப்பும் ஏற்படுகிறது.

முன்னதாக, குடிநீர் கோரி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியபோது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இருப்பினும், காட்டுவளவுக்கு இதுவரை நல்ல தண்ணீர் வசதிசெய்து தரப்படவில்லை. மேலும் ராயகவுண்டன்புதூர் பகுதியிலும் மின்மோட்டார் பழுதடைந்து அப்பகுதி மக்களும் குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே காட்டுவளவு, ராயகவுண்டன்புதூருக்கும் மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வசதியும், காட்டுவளவிற்கு நல்ல தண்ணீர் வசதியும் செய்து தருவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவினை அளிக்கையில், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.முத்துச்சாமி, ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.பழனிச்சாமி, ஏ.ராஜன், ஏ.சண்முகம், விதொச ஒன்றிய தலைவர் எஸ்.மல்லப்பன், 60 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: