கோவை, மார்ச் 2-
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மற்றும் பேராசிரியர் எம்.தர்மராஜின் நீதிமன்றக் காவல் வரும் மார்ச் 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசியர் பணிக்காக சுரேஷ் என்பவரிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோரை கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பிப்ரவரி 3 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், தங்களை பிணையில் விடுவிக்கக்கோரி அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் பிறகு கணபதியின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் மீதான விசாரணை லஞ்சம், ஊழல் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. அப்போது கணபதி, தர்மராஜ் ஆகியோரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, இருவரின் நீதிமன்றக் காவலை மார்ச் 16 ஆம் தேதி வரைக்கும் நீட்டித்து நீதிபதி ஜான்மினோ உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.