ஈரோடு, மார்ச் 2-
தலித் மக்களின் மீதான வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் நசியனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வியாழனன்று நசியனூர் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட உதவித் தலைவர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரையாற்றி பேசினார். இதில் தமிழகத்தில் தலித் மக்களின் மீதான வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை வழக்குகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தல், சாட்சிகளை ஆஜர்படுத்துதல், கைது செய்யாமல் சாதிய ஆதிக்க சக்தியினருக்கு ஆதரவாக இருப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நீர் நிலை புறம்போக்கில் உள்ளவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்து விட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் திண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, மாவட்ட துணைச் செயலாளர் என்.பாலசுப்பிரமணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பா.லலிதா, வாலிபர் சங்ககத்தின் நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: