க.சுவாமிநாதன்
தொலைத்தொடர்புத்துறை “ஏர்செல்” நிறுவனத்தின் திவால் நோட்டிசால் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு தேசிய நிறுவனச் சட்ட தீரப்பாணையத்தின் முன்பு இதற்கான அறிவிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15,500 கோடி கடன் சுமையோடு இந்நிறுவனத்திற்கு கடன் கொடுத்த நிதி நிறுவனங்களெல்லாம் விழிபிதுங்கி நிற்கின்றன.19 ஆண்டுகளுக்கு முன்பாக சி.சிவசங்கரனால் துவக்கப்பட்ட நிறுவனம் இது. ஜனவரி 2018ல் 8 கோடி வாடிக்கையாளர் தளத்தோடு, செல் வணிகத்தில் 7.3 சதவீத சந்தைப் பங்கோடும் உள்ள நிறுவனமாகும். இது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.6500 கோடிக்கு 2005ல் விற்கப்பட்டது. 2017ல் ஆர்.காம் நிறுவனத்துடன் இணைப்பது என்ற முயற்சி வெற்றிபெறவில்லை.

கடன்காரர்களின் பட்டியலைப் பார்த்தால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பெயர் உள்ளது. இதுதான் மிகப்பெரும் கடனாளராம். மொத்தம் வங்கிகளுக்கு எஸ்பிஐ உட்பட வர வேண்டிய தொகை ரூ.12,627 கோடிகள். அந்நியக் கரன்சி கடன் ரூ.595 கோடி. வங்கி உத்தரவாதம், பஞ்சாப் நேசனல் பாங்க் போல் உத்தவாதக் கடிதம் அடிப்படையில் நிலுவையிலுள்ள கடன் ரூ.3232 கோடி. மலேசிய “மாக்சிஸ்” உடமையில் உள்ள நிறுவனமென்றாலும் கடன் கொடுத்து மாட்டியிருப்பது அநேகமாக அனைத்துமே இந்திய வங்கிகள்தான்.ஐடியா செல்லுலார், வோடபோன் நிறுவனங்கள் ஏர்செல் இணைப்புகளை “பிளாக் லிஸ்டில்” வைத்துவிட்டார்கள். காரணம் தங்கள் நிறுவனத்தின் அழைப்புகளுக்காக ஐடியாவுக்கு ஏர்செல் வைத்துள்ள பாக்கி ரூ.60 கோடி. இப்படி மற்ற நிறுவனங்களுடனான அழைப்பு பகிர்வுகளுக்கு மாதம் ரூ.100 கோடி தேவைப்படும். அதற்கான தொகை ஏர்செல் வசம் இல்லை. ஏர் டெல்லுடனும், ரிலையன்ஸ் ஜியோவுடனும் எங்கள் அழைப்புகளைத் தடை செய்துவிடாதீர்கள் என்றும் வலைத்தள இணைப்பிற்காகவும் ஏர்செல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தனியார்மயத்தை சிலாகித்துப் பேசிய பலர் இன்று என்ன சொல்லப்போகிறார்கள்?

குதிரை குரூப் போட்டோ எடுக்க முடியுமா?
நாய்க்கு எங்கு கல்லடி பட்டாலும் அது நொண்டுவது கால்தான் என்பார்கள். அதுபோல நவ்ரவ் மோடி ஓடிப்போனாலும் போனார்… ஆனால் இங்கே இருக்கிற நடுத்தர, சிறு தொழில்களே செயல் மூலதனம் கிடைப்பதற்கு படாதபாடுபடுகிறது.

பஞ்சாப் நேசனல் வங்கி அளித்த ‘கடன் உத்தரவாதக் கடிதமே’ நிரவ் மோடியின் 11,500 கோடி ஸ்வாகாவுக்கு காரணம் என்பதால் வங்கிகள் தற்போது உத்தரவாதக் கடிதங்கள் அளிப்பதற்கே தயங்குகின்றன.சேம்பர் ஆப் காமர்ஸ் ஒன்றின் தலைவர் அனில் கைத்தான் வார்த்தைகளில்,
“அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் அமைப்பு ரீதியான தோல்வியைப் பரிசீலிக்க வேண்டுமே தவிர, நல்ல தொழில் அதிபர்களைப் பாதிக்கிற வகையில், ஸ்குரூக்களை டைட் செய்யக்கூடாது. கழுதைகளையும், குதிரைகளையும் ஒன்றாய்ப் பார்ப்பது முறையல்ல” என்கிறார். என்ன செய்வது? குதிரைகளுக்கெல்லாம் பிரதமரோடு குரூப் போட்டோ எடுக்கிற வாய்ப்பு கிடைக்கிறதா! அனில் கைத்தான் புலம்பித் தள்ளியுள்ளார்.

“இரண்டு, மூன்று கறுப்பு ஆடுகளுக்காக ஒட்டுமொத்த தொழில்துறையே தண்டிக்கப்படக்கூடாது. அது தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும். எளிதாக வணிகம் நடத்துகிற வாய்ப்புகளையும் அது பாதிக்கும்”. இப்படி கழுதை, கறுப்பு ஆடு என்றெல்லாம் நடுத்தர, சிறு, குறு தொழிலதிபர்களே மிகப்பெரும் தொழிலதிபர்கள் பற்றிக் கோபமாக, ஆவேசத்தோடு பேசுகிற நிலையேற்பட்டுள்ளது.

“அது வங்கி இயக்குநரவை, தலைமை இயக்குநர், கிளை வரை எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும்” என்கிறார். (இந்து பிசினஸ் லைன் – மார்ச் 2, 2018)

இதோ இன்னொரு “ப்ராடு”
பெரும் மருத்துவ நிறுவனமான “ஃபோர்டிஸ் ஹெல்த் கேர்” ஓர் வெளித் தணிக்கை நிறுவனம் ஒன்றை அமைத்து ரூ.473 கோடிகள் மோசடி குறித்து விசாரணை செய்யவுள்ளது.
யார் மீது விசாரணை? மல்வீந்தர்சிங் மற்றும் சிவிந்தர்சிங் ஆகிய இருவர் மீதே புகார்.யார் இந்த ஜோடி தெரியுமா? இவர்கள்தான் ஃபோர்டிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தைத் துவக்கியவர்கள். கடந்த மாதம் இருவரும் ஃபோர்டிஸ் இயக்குநரவையிலிருந்து விலகிவிட்டார்கள். இயக்குநரவையின் ஒப்புதல் இல்லாமல் ரூ.473 கோடிகளை அவர்கள் எடுத்துள்ளார்கள்.பிப்ரவரி 16 அன்று செபி இவ்விசாரணையை நடத்துமாறு இந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

எப்படி இப்பிரச்சனை வெடித்தது?
நிறுவனத்தின் தணிக்கை நிறுவனம் டிலாய்ட் காஸ்கின்ஸ் 2 செல்ஸ் லிமிட்டெட் ஜூலை – செப்டம்பர் 2017க்கு இடைப்பட்ட காலாண்டு கணக்கில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டது. மேற்கூறிய ஜோடி இப்பணத்தை முறையாகக் கணக்கில் வைக்கும் வரை அல்லது பணத்தைத் திரும்பக் கட்டுகிற வரை அக்கணக்குகளை ஏற்க இயலாதென்று தெரிவித்துவிட்டது. நிறுவனத்தின் நிதி நிலைமைகள் குறித்த மதிப்பீடுகளையும் தெரிவிக்க இயலாது என எழுத்துப்பூர்வமாகக் குறிப்பு வைத்துள்ளது.

தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் வருவதுபோல ஒவ்வொரு துறையிலும் தனியார் நிறுவனங்களின் மோசடிகள், ஏமாற்று வித்தைகள், திறமையின்மை அம்பலப்பட்டு வருகிற காலம் இது.

கடல் தாண்டி ஊழலா?
இந்தியத் தொழிலதிபர்கள் அந்நிய மண்ணில் கால் பதிக்கிறார்கள் என புளகாங்கிதத்தோடு பேசுபவர்கள் உண்டு. இப்போது உலக மகா ஊழல்களிலும் இவர்கள் பெயர்கள் அடிபடத் துவங்கிவிட்டது.உப்பிலிருந்து மென்பொருள் வரை உலகம் முழுவதும் வணிகம் செய்கிற டாட்டா குழுமம் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகூவின் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ளது. இஸ்ரேலிய காவல்துறையின் பரிந்துரைகளில் டாட்டா குழுமம் மீதும் புகார்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இரத்தன் டாட்டா நவம்பர் 1,2017 அன்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவீவ் சென்ற போது இஸ்ரேல் விசாரணைக்குழுவின் முன்பு அவர் ஆஜராகி உள்ளார். விசாரணைக்குழுவின் “வேண்டுகோளுக்கு இணங்க” ஆஜரானதாக ரத்தன் டாட்டா கூறியுள்ளார். வி.ஐ.பி விசாரணை இப்படித்தான் இருக்கும் போல…

ஜோர்டான் ஆற்றின் கரையில் டாட்டா துவங்கவுள்ள ஓர் தொழில் குறித்தே இச்சர்ச்சை எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகூவும், அவரது துணைவியார் சாராவும் தொழிலதிபர்களிடம் இருந்து விலை மதிப்பு மிக்க பரிசுகளை வாங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடந்து வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: