கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஒரி ஆட்சி செய்தபகுதியும், தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும் கொல்லிமலை இருந்து வருகிறது.

இங்கு பழமையான அரபள்ளி ஈஸ்வரர் கோவில், சங்க கால வழிபாடு தெய்வமான கொல்லிபாவை எனப்படும் எட்டுக்கை அம்மன் கோவில், மாசி பெரியசாமி கோவில் உள்ளிட்ட புகழ் பெற்ற கோவில்களும், வற்றாத ஆகாய கங்கை அருவி, மாசில்லா அருவி,சந்தனஅருவி, சிற்றருவி, தேனருவி, நம்ம அருவி உள்ளிட்ட ஏராளமான அருவிகளும் உள்ளது.இதுதவிர முலிகை பண்னை, பைன் ஆப்பிள்பண்னை, படகுசவாரி, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களையும் கொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நாள்தோறும் கொல்லிமலைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இங்குள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் பார்த்து ரசிக்க அரசு நிர்வாகத்தால் கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசுக்கு பெரும் வருவாயை கொல்லிமலை ஈட்டி தந்ததாலும் சுற்றுலா பயணிகளுக்கான போதிய அடிப்படை வசதிகளையும், முறையான பாரமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் சுற்றுலா துறை அலட்சியம் காட்டி வருவதாக இங்குள்ள மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, சுற்றுலாபயணிகள் போட்டுவிட்டு செல்லும் குப்பைகளை கூட சரிவர அகற்றப்படாததால் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கும் அவல நிலை காணப்படுகிறது. அதேநேரம், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் மட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடம் மட்டும் கண் துடைப்பிற்காக சுத்தம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள சாலைகளின் நிலையோ மிக மோசம். பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல நேரங்களில் மோசமான சாலையின் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் படுகாயம் அடையும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து கொல்லிமலைக்கு வந்திருந்த சுற்றுலா பயணியான வினோத் என்பவர் கூறுகையில்:- நான் சென்னையில் இருந்து விடுமுறைக்காக நண்பர்களுடன் கொல்லிமலைக்கு வந்திருக்கிறேன். இங்கு தங்கும் இடம், உணவு போன்றவற்றில் மற்ற சுற்றுலா தளங்களைவிட கட்டணம் குறைவு தான். ஆனாலும் எந்த சுற்றுலா இடத்திற்கு போனாலும் அங்கு நின்று அதன் அழகை கண்டுகளிக்க முடியாமல், படுமோசமாக சுகாதாரமின்றி உள்ளது என வேதனை தெரிவித்தார்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாமக்கல் மாவட்ட சுற்றுலாதுறை அலுவலர் சிவக்குமாரிடம் கேட்கையில், கொல்லிமலை பஞ்சாயத்து நிர்வாகம்தான் கொல்லிமலை பராமரித்தல் பணிக்கு பொறுப்பு, நான் மேற்பார்வை மட்டுமே, ஆகவே கொல்லிமலையை சுற்றுலா துறையினர் பராமரிப்பது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் தான் பதில் கூற வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் வி.கே.ராஜ் தெரிவிக்கையில்:- நவீன காலத்தில் கூட கொல்லிமலை பழங்குடி இன மக்கள் பழமை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள சுற்றுலா தளத்தினை அரசு முறையாக பராமரிக்காமல் உள்ள காரணத்தினால் கொல்லிமலையே சுகாதார சீர்கேட்டு மையமாக மாறிவருகிறது. இதனால் சுற்றுச் சூழலும் மாசுபடுகிறது. எனவே, அரசு நிர்வாகம் குவிந்துள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதுடன், சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே கொல்லிமலை வளத்தினை பாதுகாக்க முடியும் எனதெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.