திருப்பூர், மார்ச் 2-
குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் இரவு முழுவதும் முச்சுதிணறலுக்கு உள்ளான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்துக்குளி தாலுகா சென்னிமலை ரோடு பிரிவில் உள்ள குப்பை கிடங்கில் வியாழனன்று தீடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகைமூட்டம் எழுந்தது. இந்த தீ மற்றும் புகைமூட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுதிணறல் உள்ளிட்ட சிரமங்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் சிவசாமி, தாலுகா குழு உறுப்பினர் கை.குழந்தைசாமி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்த தகவலறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தீயை உடனடியாக அணைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: