திருப்பூர், மார்ச் 2-
பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயில் காலதாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து வெள்ளியன்று பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவையில் இருந்து ஏராளமான பயணிகள் திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். இந்த ரயில் தினமும் காலை 9.15 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தை வந்தடைய வேண்டும். ஆனால், கடந்த இரண்டு மாதமாக தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளியன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயிலானது, மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதற்காக வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பயணிகள் 100க்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தில் நின்று ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உடனடியாக கோவை- ஜெய்ப்பூர் செல்லும் விரைவுஎக்ஸ்பிரஸ் ரயில் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மேலும், கோவை-சென்னை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் சோமனூர், சூலூர் ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், ரயில்வே காவல்துறை மற்றும் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்பாலக்காடு – திருச்சி பயணிகள் ரயிலை இனிவரும் காலங்களில் தாமதமின்றி இயக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து பயணிகள்போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறிச் சென்றனர். இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கோவை-சென்னை மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த இரண்டு மாதங்களாக கேரளாவில் டெக்னிக்கல் வேலை நடப்பதால் தான் பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் தாமதமாக வருகிறது என ரயில்வே துறையினர் விளக்கம் அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: