புதுதில்லி
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து ஓரே வருடத்தில் இருமடங்காக அதிகரித்து ரூ 92 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது மற்ற தொழிலதிபர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கவுதம் அதானியின் தொழில், வர்த்தகம் 109 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் ஷாங்காய் நகரில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஹருன் குளோபல் இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
ஹருன் குளோபல் ஏடு 2018ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2ம் இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் 131 கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு மிகப்பெரிய தொழில்வளர்ச்சியையும், சொத்துக்கள் அடிப்படையில் வளர்ச்சியையும் பெற்றவராக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இருப்பது தெரியவந்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்துகள் இரு மடங்காக அதிகரித்து, 1400 கோடி டாலர்களாக(ரூ.92 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இவரின் தொழில், வர்த்தகம் 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என ஹருன் குளோபல் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இதே தருணத்தில் இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடைய இருந்து வரும் இடைவெளி பன்மடங்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் அதற்கு மாறாக மோடியுடன் நெருக்கமாக இருக்கும் கார்ப்பரேட் கம்பெனியான அதானி குழுமத்தின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்திருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. மோடி எப்போது வெளிநாடு சென்றாலும் தன்னுடன் அதானி குழுமத்தினரையும் அழைத்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.