திருப்பூர். மார்ச் 2-
திருப்பூர் அருகே ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த தனியார் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவரின் மகன் விவேகானந்தன் (13), திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து  வந்தார். இந்நிலையில் வியாழனன்று ராஜ்குமார் பணிக்கு சென்ற நிலையில், அவரது மனைவியும் அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த விவேகானந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு திரும்பிய ராஜ்குமார், தனது மகன் தூக்கில் தொங்கியிருந்ததை பார்த்து கதறினார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். இதில் பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் மனமுடைந்தாகவும், தன்னால் தனது பெற்றோருக்கு எந்த அவமானமும் ஏற்படக்கூடாது என்று கருதி தற்கொலை செய்து கொள்வதாக அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய திருப்பூர் ஊரக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்கள் சாலை மறியல்:
இதற்கிடையே, விவேகானந்தன் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டி மாணவனின் உறவினர்கள் தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: