ஈரோடு, மார்ச் 2-
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான சீருடை மாற்றம் செய்யப்படுவதால் ஈரோடு ரெடிமேடு சீருடை உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான சீருடை எதிர்வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது. இதன்படி 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ஒரு வகையான சீருடை, 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஒரு வகையான சீருடை வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் 5.5 கோடி மீட்டர் துணி தயாரிப்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், அரசு சார்பில் சீருடை வழங்கினாலும், ரெடிமேடு சீருடைகள் விற்பனை அதிகளவில் உள்ளது.இதற்காக ஈரோடு ஜவுளி மார்கெட் பகுதியில் சில வியாபாரிகள் ரெடிமேடு சீருடை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், எந்த வகையான சீருடை வழங்கப்படுகிறது என்பது தெரியாமல் ரெடிமேடு விற்பனையாளர் குழப்பத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும், தற்போதுள்ள சீருடையை என்ன செய்வது என தெரியாமல் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

இது குறித்து ரெடிமேடு விற்பனையாளர்கள் கூறுகையில், ஈரோடு கனிமார்கெட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட ரெடிமேடு சீருடை விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்கள் அரசுப்பள்ளி சீருடை, தனியார் பள்ளி சீருடை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, அரசுப்பள்ளியில் சீருடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாதிரி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.