நாமக்கல், மார்ச் 1-
தமிழக மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்ற நிகழ்ச்சியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலுள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் வியாழனன்று முதலாவது உலக தமிழர் மரபுரிமைமாநாடு நடைபெற்றது. 3 நாள் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், பி.தங்கமணி, வெ.சரோஜா மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு கலைஞர்கள், இலக்கிய ஆர்வாலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி வியாழனன்று காலை நிகழ்ச்சி துவங்கிய நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்கவில்லை, அமைச்சர்கள் வெ.சரோஜா, பி.தங்கமணி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் விழா மேடையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வரவில்லை. இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தது. முன்னதாக, கடந்த வாரம் நாமக்கல்லில் நடைபெற்ற அம்மா பூங்கா திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, தற்போதைய அதிமுக ஆட்சியில், தான் அமைச்சராக உள்ள மின்சார துறையில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தமிழகமக்களுக்கு கிடைக்கிறது எனபெருமிதத்துடன் தெரிவித்து சென்றனர். இச்சூழலில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே மின்தடை ஏற்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: