விருதுநகர்:
பொதுத்துறை மற்றும் கூட்டுறவு கரும்பு ஆலைகள் தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கியாக வைத்துள்ள ரூ.236 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்ச்.6 -ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளைத் திரட்டி காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டப் பயிற்சி முகாம் விருதுநகரில் வியாழனன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வருகை தந்த டி.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழகத்தில் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அதில் 24 தனியார் ஆலைகள், இரண்டு பொதுத்துறை ஆலைகள். 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஆகும். இதில் இரண்டு பொதுத்துறை மற்றும் மூன்று கூட்டுறவு ஆலைகள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன. 13 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்த ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.236 கோடி தர வேண்டியுள்ளது.

மாநில அரசு நிர்ணயம் செய்த கரும்புக் கான விலையைத் தான் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், அதை மீறி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மத்திய அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கி வருகின்றன.  தனியார் சர்க்கரை ஆலைகள் டன் ஒன்றுக்கு ரூ.2,550 மட்டுமே வழங்குகின்றன. ஆனால், தமிழக அரசின் உத்தரவுப்படி ரூ.2,750 வழங்க வேண்டும். டன் ஒன்றுக்கு ரூ.250 குறைவாக வழங்குகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு கரும்புக்கான விலையை தமிழக அரசு இது வரை அறிவிக்கவில்லை.

மத்திய அரசு அறிவித்த தொகையை மட்டுமே வழங்க முடியும் என நீதிமன்றத்தில் தனியார் ஆலை நிர்வாகத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மேலும், விவசாயிகளிடம் மோசடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.2,500 கோடி கடனில் உள்ளன.அந்தக் கடன் தொகையை மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்த நிதியை வழங்க வேண்டும். 

கரும்பு விவசாயிகளின் கோரிக்கை களை வலியுறுத்தி வரும் மார்ச் 6 -ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஊர்வலம் துவங்கி முதலமைச்சரின் இல்லம் முன்பு நிறைவுபெறும். தொடர்ந்து அங்கு காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்.  தமிழகம் முழுவதும் 2016-17 -ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் தொகை செலுத்தியிருந்தும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால், தமிழக முதல்வர் வறட்சி நிவாரணத் தொகை 100 சதவீதம் வழங்கப்படும் என அறிவித்தார். இன்று வரை ஏராளமான விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. பயிர்க் காப்பீட்டில் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் நுழைந்து அத்திட்டத்தையே சீர்குலைக்க முயற்சிக்கின்றன. எனவே, தனியார் வங்கிகளை பயிர்க்காப்பீட்டில் அனுமதிக்கக் கூடாது.

பட்டா நிலங்களில் மணல் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் அதல பாதா
ளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. நல்ல தண்ணீர் உப்பு நீராக மாறிவிடும். எனவே, இதை ஒரு சமூக பிரச்சனையாகக் கருதி தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் உயர் கோபுரம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அந்த நிறுவனங்கள் விவசாயிகளி டம் எந்தவித அனுமதியும் பெறாமல் கோடிக்கணக்கான விலை பெறுமான நிலங்களில் கோபுரங்கள் அமைக்கின்றன. நிலத்தின் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு அதிகம் வழங்கிய பின்னரே அந்த இடத்தில் பணிகள் தொடர வேண்டும் என மத்திய அரசின் சட்டம் சொல்கிறது. எனவே, விவசாயிக ளுக்கு சட்டப்படி உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிய பின்பே கோபுரங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது விருதுநகர் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன், மாவட்டச் செயலாளர் வி.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: