புதுக்கோட்டை:
நலவாரிய பணப்பயன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி வருகின்ற மார்ச் 28 அன்று சென்னை அமைப்பு சாரா நலவாரிய அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு-முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன மாநிலக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. சம்மேளத் தலைவர் கே.செல்லப்பன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடந்த மூன்று கல்வியாண்டுகளாக நலவாரியப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஓய்வூதியம் கடந்த ஒரு வருடமாக வழங்கப்படவில்லை. மகப்பேறு,
திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்துப் பணப்பயன்களும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளது.

மேற்கண்ட நிலுவைத் தொகைகளை காலதாமதமின்றி உடனடியாக வழங்கக்கோரி அமைப்பு
சாராத் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு மார்ச் 28-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு-முற்றுகைப் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தையல் கூட்டுறவுக்கூலி கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. மிகக்குறைவான கூலிபெறும் இப்பகுதியினருக்கு ஆண்டுக்கு 5 சதவிகிதம் ஊதிய உயர்வுக்கு அரசாணை வெளியிட்டும் அமலாகவில்லை.

தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். துணிகளை தைத்துக் கொடுத்த ஒரு மாத காலத்திற்குள் கூலி வழங்க வேண்டும்.
முறையான துணி விநியோகம், போனஸ், இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் சம்மேளனத்தின் 5-வது மாநில மாநாட்டை வடசென்னையில் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.