கோவை, மார்ச் 1-
பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழனன்று துவங்கிய நிலையில் தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வியாழனன்று துவங்கியது. இதில் முதல் தேர்வாக தமிழ் முதல்தாளுக்கான தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 113 பள்ளி மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 36 ஆயிரத்து 299 மாணவ, மாணவிகள் எழுதினர். 282 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 7 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்கள் 1,148 பேர் தேர்வு எழுதினர். இதேபோல், இந்தி, மலையாளம், பிரெஞ்சு உள்ளிட்ட பிற மொழி பாடத்தேர்வுகளும் வியாழனன்று நடைபெற்றது. பார்வையற்றோர் மாணவர்கள் தேர்வு எழுத, ஸ்கிரைப் (சொல்பவை எழுதுபவர்) நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும். இந்த தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் 1,950 அறை கண்காணிப்பாளர்கள், 300 பறக்கும் படை அலுவலர்கள், 22 வழித்தட அதிகாரிகள், 113 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், துறை அலுவலர்கள் என சுமார் 2 ஆயிரத்து 800 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன், இணை இயக்குனர் சதுராமா வர்மா, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோர் திருச்சி சாலையில் உள்ள செயின்ட் மேரீஸ் உள்ளிட்ட பள்ளிகளில் நடந்த தேர்வினை பார்வையிட்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 79 தேர்வு மையங்களில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து 212 மாணவர்களும், 13 ஆயிரம் 607 மாணவிகளும், தனித் தேர்வர்களாக 983 பேர் என மொத்தம் 25 ஆயிரத்து 802 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இத்தேர்வையொட்டி மேல்நிலை பொதுத் தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 77 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர் கூடுதல் துறை அலுவலர்களாக 87 ஆசிரியர்களும், அறைக் கண்கா
ணிப்பாளர்களாகப் பணியாற்ற 1858 ஆசிரியர்களும் நியமனம் செய்யபப்பட்டிருந்தனர். இதேபோல், 152 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் பிஷப் உபகாரசாமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் 121 தேர்வு மையங்களில் நடைபெறும் தேர்வில் 19 ஆயிரத்து 579 மாணவர்களும், 21 ஆயிரத்து 66 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 645 தேர்வர்கள் தேர்வினை எழுதினர். இதில் 93 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களாவவார்கள். இந்நிலையில், கோட்டை அரசு பெண்கள் மேல்ல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ரா.பாஜிபாகரே ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர், 6 அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 219 மாணவ, மாணவியர், 4 பகுதி உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 717 மாணவ, மாணவியர், 22 சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 909 மாணவ, மாணவியர் மற்றும் 77 மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 44 மாணவ, மாணவியர் என மொத்தம் 202 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 504 மாணவ, மாணவியர்களும், 753 தனித்தேர்வர்களும் ஆக மொத்தம் 27 ஆயிரத்து 257 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினர். இவற்றில் 44 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களாவர்கள். இத்தேர்வையொட்டி 83 முதன்மை கண்காணிப்பாளர்களும், 83 துறை அலுவலர்களும், 300 பறக்கும்படை உறுப்பினர்களும் ,1500 அறை கண்காணிப்பாளர்களும் என மொத்தம் 1966 நபர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டததில் 37 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 886 மாணவர்களில் 7 ஆயிரத்து 785 பேர் தேர்வெழுதினர். இந்நிலையில் கோத்தகிரி அரசினர் மேல்நிலைப்பளியில் நடைபெற்ற பொதுத்தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.