கோவை, மார்ச் 1-
தேசிய அளவிலான சிலம்பு போட்டியில் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 66 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னையில் தேசிய அளவிலான 14 ஆவது சிலம்பம் போட்டி கடந்த பிப்.24 ஆம்தேதி முதல் பிப்.26ம் தேதிவரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மினி சப்ஜூனியர், சப்ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் இப்போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பத்து மாநிலங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் கோவை தொட்டிபாளையம் பகுதியில் செயல்படுகிற சர்வதேச இந்தியன் சிலம்பம் கலைக் கழகத்தில் இருந்து 13 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் கௌதம் 3 தங்கம், 2 வெள்ளி, அருண்குமார் 3 தங்கம், 1 வெள்ளி, ஹரிணி 2 தங்கம், 1 வெண்கலம், பன்னீர் செல்வம் 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம், நவீன்ராஜ் மற்றும் திலிப்குமார் ஆகியோர் தலா 2 தங்கம், 1 வெண்கலம் என பதக்கங்களை அள்ளி குவித்தனர். நிறைவில் இவ்வமைப்பின் சார்பில் 16 தங்கம், 12 வெள்ளி, 8 வெண்கலம் என 36 பதக்கங்களை வென்றனர். இதேபோல், கோவை புலியகுளம் பகுதியில் செயல்படும் சிலம்பாலயா தற்காப்பு பயிற்சி மையத்தின் சார்பில் பத்து வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற இவ்வமைப்பின் வீரர்கள் நிறைவில் 13 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என 30 பதக்கங்களை வென்றது. சென்னையில் நடைபெற்ற 14 ஆவது தேசிய அளவிலான சிலம்ப போட்டிகளில் கோவையில் இருந்து பங்கேற்ற சர்வதேச இந்தியன் சிலம்பம் கலைக்கழகம் மற்றும் சிலம்பாலாய ஆகிய இரண்டு அணிகளை சேர்ந்த வீரர்கள் மட்டும் 66 பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: