காஞ்சிபுரம், மார்ச் 1-
கருணை இல்லத்தில் நடைபெறும் விதிமீறல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்திடமாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கேட்டுக்கொண் டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் பாலேஸ்வரத்தில் செயல் பட்டு வரும் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கான கருணை இல்லத்தின் மீது பல்வேறு குற்றம்சாட்டுகள் எழுந்ததையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்தஒருவாரமாக வருவாய்த்துறை, சமுகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு சட்டவிரோதமாக தங்கவைக்கப்பட்டிருந்த 274 முதியவர்களை காஞ்சிபுரம், வேலுர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இல்லங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்தனர். இந்நிலையில் புதனன்று (பிப் .28)மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழுஉறுப்பினர். வா.பிரமிளா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தரி உத்திரமேருர் வட்டச்செயலாளர் சி.பாஸ்கரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் உள்ளிட்டோர் பாலேஸ்வரம் கருணை இல்லத்தில் ஆய்வு நடத்தினர். கருணை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள முதியவர்களிடம் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் ராஜூ, மாவட்ட சமுக நலத்துறை அலுவலர் சங்கீதா உள்ளிட்டோரிடமும் கருணை இல்ல நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

வீட்டிற்கு அனுப்பமறுப்பு:
இல்லத்தில் இருந்த ஒரு முதியவர்  கூறுகையில் தாம்பரம் டிபி மருத்துவமனைக்குச் சளி அதிகமாக இருந்ததனால் சென்றிருந்தேன். அங்கிருந்து என்னை இங்கு அழைத்து வந்துவிட்டனர். என்னை வீட்டிற்கு அனுப்ப மறுத்துவருகின்றனர். இதுபோன்று பலர் பல இடங்களில் இருந்து அழைத்துவரப் பட்டுள்ளனர். விரும்பினாலும் வீட்டிற்கு அனுப்ப மறுத்துவருகின்றனர் என்றார். அங்குள்ளமுதியோர் சிலர் கூறுகையில், தினமும் அரிசிக் கஞ்சி மட்டுமே கொடுக்கின்றனர், மருத்துவர்கள்யாரும் வந்து பார்ப்பதில்லை, இல்லத்தைச் சுத்தம் செய்வதில் இருந்து உணவு கொடுப்பது வரை ஒருசிலர் மட்டுமே செய்வதால் சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால் நோய்த்தொற்று ஏற்பட்டு பலர் இறக்கின்றனர்.  கழிவறைகள் பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் தற்போதுதான் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று இறந்து விடுவார்கள் என்று தெரிந்தால் குறிப்பாகப் பெண்களுக்கு அனைத்து உடையையும் அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக விட்டுவிடுகின்றனர். எங்கள் கண்முன்னே இறந்தவர்களை இதுபோன்று அடக்கம் செய்வது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று எனக் கூறினார்.மேலும் பல நாட்களாக இந்த இல்லம் குறித்த அனைத்துத் தகவல்களும் தெரிந்த இளைஞர் ஒருவரை சில நாட்களாகக் காணவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.முதியவர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே ஒரு முதியவரின்சடலத்தை அங்கிருந்த ஊழியர்கள் கொண்டு செல்வதைப் பார்க்க முடிந்தது.

சென்னை உள்ளிட்ட பல்வேறுஇடங்களில் கடந்த சில ஆண்டுகளாகக் காணாமல் போன முதியவர்களின் உறவினர்கள் அவர்களின் புகைப்படம் மற்றும் விபரங்களுடன் அவர்களைத் தேடி இங்கு வந்திருப்பதைக் காணமுடிந்தது. இதனைத் தொடர்ந்து இல்லத்தில் பிணங்களை அடக்கம் செய்துள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று விவரித்த இயக்குநர் தாமஸ், இறப்பவர் களை மதச்சடங்கு அடிப்படையில் தான் அடக்கம் செய்கிறோம்.இந்தப் பிணவறையில் அடக்கம் செய்வதன் மூலம் சுற்றுச்சுழல் பாதுகாக்கப்படும். மண் வளம் பாதுகாக்கப்படும், நீர்வளம் பாதுகாக்கப்படும். இந்த அறைகளில் 14 ஆண்டுகள் வரை பிணங்களை அடக்கம் செய்யப்படும்.14 ஆண்டுகளுக்குப் பின்னர்அடுத்த பிணவறையில் அடக்கம் செய்யத் தொடங்கிவிடுவோம். இதுபோன்று 30 ஆண்டுகளில் எட்டாயிரம் பிணங்கள் வரை அடக்கம் செய்யலாம். 30 ஆண்டுகள் கழித்து அங்கு உள்ள எலும்புகளைத் தீவைத்து கொளுத்தி விடுவோம் என தன் பங்கிற்கு விளக்கம் கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில் முதியோர், மனநோயாளிகள்,குழந்தைகள் இந்த இல்லத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். முதியவர்களுக்கான இல்லம் என கூறிவிட்டுமனநலம் குன்றியவர்களையும் ஒன்றாக வைத்துள்ளனர். இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கானகருணை இல்லம் என்று அனுமதி பெற்றுவிட்டு இறக்கும் நபர்கள் என்று எப்படி இவர்கள் முடிவு செய்கின்றனர் எனத் தெரியவில்லை. மனநலம் குன்றியவர்களும் நன்றாக இருப்பவர்களும் ஒரே இடத்தில் இருப்பது கூடவே கூடாது. மனநலம் குன்றியவர்களுக்கு சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கான தனி அனுமதி பெறவேண்டும். இதுபோன்ற அனுமதி பெறப்படவில்லை. எனவே இதில் சந்தேகம் இருப்பதால் தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அனுமதியைப் புதுப்பிக்காமல் கடந்த ஆறு மாதங்களாக இல்லத்தைச் சட்டத்திற்கு புறம்பாக நடத்தி வந்துள்ளனர். கண்ணுக்கு முன்னால் இறந்தவர்களை அடக்கம் செய்வது என்பது சரியான முறையல்ல.

இயக்குநர்தாமஸ் கூறுவது போல்இந்த அடக்கம் செய்யும் முறை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதுஎன்றால் ஊராட்சியில் உள்ள பொது சுடுகாட்டில் இதுபோன்ற அமைப்பை உருவாக்கி அதில் இறக்கும் அனைவரையும் அடக்கம் செய்திருக்கலாம். சந்தேகத்திற்குரிய இந்த முறைக்கு அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிகொடுத்தார்கள் என்று கேள்வி எழுப்பிய வாசுகி, சமுகநலத்துறை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டிருந்தால் அவர்களுக்குப் பல சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கும். சமூகநலத்துறை கடந்த காலங்களில் ஏன் இந்த ஆய்வினை மேற்கொள்ளவில்லை. ஆய்வுக்கு வரும் அரசு அலுவலர்கள் வாசலோடு திரும்பிச் செல்கின்றனரா? அவர்களின்கடமையை முழுமையாகச் செய்யவில்லையா என்ற கேள்வி எழுகிறது. மாவட்ட நிர்வாகத்திற்கு இதுகுறித்து பலமுறை கிராமமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர் மட்ட விசாரணை செய்ய வேண்டும், இந்த இல்லத்தை மூடுவது மட்டும் தீர்வாகாது. கடமையை செய்யத் தவறிய அரசு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுவதுடன், மாநிலம் முழுவதும் உள்ள இதுபோன்றகருணை இல்லங்களை ஆய்வு செய்து தமிழக அரசு சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், பல்வேறு இந்து அமைப்புகள் இதற்கு மதச்சாயம் பூசிட முயற்சிக்கின்றனர். இதனைத் தடுக்கவேண்டும்.

ஆட்சியருடன் சந்திப்பு :
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்த ஆய்வு குழுவினர் கருணை இல்லம் மற்றும் அந்தப் பிணவறை கட்டுவதற்கு ஊராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறையினரிடம் முறையாக அனுமதிவாங்கப் பட்டுள்ளதா, சந்தேகத்
திற்குரிய இந்த முறைக்கு மாவட்டகாவல் துறை கண்காணிப்பாளர் எவ்வாறு தடையில்லாச்சான்றுகொடுத்தார், மனநலம் குன்றியவர்களும், சாதாரண முதியவர்களும்எவ்வாறு ஒன்றாகத் தங்கவைக்கப்பட்டனர். மனநலம் குன்றியவர்களை தங்க வைப்பதற்கு முறையான அனுமதி வங்கியுள்ளனரா? இறப்புகள் குறித்து வருவாய்த் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மேலும் இந்த இல்லத்தின் வங்கி கணக்குகள், மற்றும் கருணை இல்லத்தின் மற்ற கிளைகளில் உள்ள நிலையை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதுகுறித்து பாலேஸ்வரம் கிராம மக்களிடம் கேட்டபோது அதிகஅளவில் துர்நாற்றம் வீசிவரும் இந்த இல்லத்தை இங்கிருந்து அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.