சென்னை, மார்ச் 1-
தலித் மக்களின் விடுதலைக்காக, சமூக மாற்றத்திற்காக இடதுசாரிகளும் விசிகவும் இணைந்து செயல் படுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதிய “அமைப்பாய்த் திரள்வோம் – கருத்தியலும் நடைமுறையும்” எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விடுதலைப் போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் பேரா.க.அன்பழகன் நூலை வெளியிட,திமுக தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் .ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதி இயக்கமாக இல்லாமல் சமூக மாற்ற இயக்கமாக செயல்படுகிறது. கருத்தியல் போராட்டத்திலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஆதிக்க சக்திகளுக்கு எதிரான களப்போராட்டங்களிலும் இடதுசாரி இயக்கங்கள் விடுதலை சிறுத்தைகளோடு இணைந்து செயலாற்றும். பெரியாரும், அம்பேத் கரும் களப்போராட்டங்களை கருத்தியல் போராட்டத்தோடு இணைத்தனர். அதன் தாக்கம் இந்த நூலில் பிரதிபலித்துள்ளது . மதவாத அரசியல், பொருளாதார இடைவெளியை உருவாக்கும் கொள்கை ஆகியவற்றை முறியடிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக செயல்படுகிறது என்றார்.

மோடி பதவியேற்ற 4 ஆண்டுகளில் கார்ப்பரேட்களின் சொத்துமதிப்பு 48 லிருந்து 58 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்தால் அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அம்பேத்கர் எச்சரித்துள்ளார் என்பதை மேற்கோள் காட்டிய அவர், பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வகுப்புவாதம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்க்கும் கருத்தியலை இந்நூல் உள்ளடக்கமாக கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஇலக்காகி உள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்துவதில் மற்ற இயக்கங்களைவிட சிபிஎம் முன்னிலையில் நிற்கும். அரசியல் இயக்கங்களின் கையேடாக இந்த நூல் உள்ளது என்றார்.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், அரசியல் வாதிகளில் ஒருசிலர்தான் தங்களை படைப்பாளிகளாக வடிவமைத்துக் கொள்கிறார்கள். திருமா களப் போராளியாகவும், படைப்பாளியாகவும் உள்ளார். தமிழகத்தில் அமைப்பைப்பற்றி ஆய்வு செய்து வந்திருக்கிற முதல்நூலாக இந்நூல் உள்ளது. அரசியல் இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் உள்ளது. ஓரிரு நாட்களில் முனைவர் பட்டத்திற்கானஆய்வறிக்கையை திருமா தாக்கல் செய்ய உள்ளார். முனைவர் திருமாவளவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய விடுதலைப்போராட்ட வீரர் ஆர்.நல்லகண்ணு, படிப்பறிவும், பட்டறிவும் கொண்டு இந்த நூல் எழுதப் பட்டுள்ளது. ‘ நாய்கள் இல்லா ஊரில் நரிகள் அம்பலம் செய்கிறது’’ என்பார்கள். அதுபோல பாடுபட்டவர்கள் எல்லாம் இருக்க, யார் யாரோ வருகிறார்கள் என்றார். நூலை வெளியிட்ட கி.வீரமணி, இந்நூலை படிப்பதோடு கற்கவும், சுவாசிக்கவும் வேண்டும். பல்கலைக் கழக அரசியல் பாடப்பிரிவில் பாடமாக வைக்க வேண்டிய அளவுக்கு தகுதியுடையதாக இந்த நூல் உள்ளதுபெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தில், முனைவர் திருமாவை அழைத்து உரையாற்றச் செய்வோம். கொள்கையில்லாமல் எந்த இயக்கமும் வெற்றி பெறாது. நூலை நூலால் மடக்குவோம் என்றார்.“அமைப்பாய் திரள்வோம்’’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் கொண்டு வர அமைப்பாய் திரள்வோம் என்றார். மாநில உரிமைகளை மீறி செயல்படும் ஆளுநரை கடுமையாக விமர்சித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “ தமிழக ஆளுநர் மத்திய அரசின் புரோக்கராக செயல் படுவதாக குற்றம் சாட்டினார். ஆளுநர் மாவட்டங்களில் ஆய்வுக்குச் சென்றால் ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் செல்லக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட வேண்டும்.

அவருக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்’’ என்றார்.ஏற்புரையாற்றிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை வீழ்த்த அமைப்பாதல் வேண்டும். கொள்கை, கோட்பாடுகளை புரிந்துகொண்டு, அதன்படி செயல் படுவதுதான் அமைப்பாதல். தேர்தலில் பெரும்பான்மை ஜனநாயகத்தை வீழ்த்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் கொண்டு வர வேண்டும். அதிகாரத்தை ஒவ்வொரு நிலையிலும் பரவலாக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஜனநாயக சக்திகள் அதிகாரம் பெற வேண்டும். அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் உறுதுணையாக இருக்கும் என்றார்.நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா (மமக), பத்திரிகையாளர்கள் இரா. ஜவஹர், நக்கீரன் கோபால், சமஸ், கவிஞர் தணிகைச்செல்வன், விசிக தலைவர்கள் சிந்தனைசெல்வன், து.ரவிக்குமார், வன்னி அரசு, முகமது யூசுப் உள்ளிட்டோர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.