கோவை, மார்ச் 1-
கோவை ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தலை தடுக்கும் உதயம்’ திட்டம் துவக்கப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க உதயம் திட்டத்தை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜி ஜார்ஜ் வியாழனன்று துவக்கி வைத்தார். இதன்பின் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசுகையில், நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர். இதில் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள், பொதுவாக பேருந்து அல்லது ரயில்நிலையத்துக்குத் தான் முதலில் செல்கின்றனர். இவ்வாறு வரும் குழந்தைகள் சில தவறான நபர்களின் கைகளில் சிக்கி விடுகின்றனர்.

இதனால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகிவிடுகிறது. இதைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். தமிழக ரயில்வே காவல் துறை மூலமாக,தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிந்த 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அவ்வாறு மீட்கப்படும் குழந்தைகள் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், உதயம் என்ற தன்னார்வ இயக்கம் சென்னைக்கு அடுத்து கோவை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கோவை ரயில்நிலையத்தில் தொடங்கப்பட்ட இயக்கத்தில் ரயில்வே துறையினர், வாடகைக் கார் ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் என 266 பேர் இணைந்துள்ளனர். வழி தவறி வரும் குழந்தைகளை மீட்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். கோவை ரயில்நிலையம் தமிழகத்தின் 2ஆவது முக்கியமான ரயில் நிலையம் ஆகும். மேலும், சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றசுற்றுலாத் தலங்களுகான உதகை, வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கு ஏதாவாகவும் கோவை ரயில் நிலையம் இருந்து வருகிறது.

கோவை ரயில்நிலையம் வழியாக நாள்தோறும் 120 ரயில்கள் கடந்து செல்கின்றன. அதில் சுமார் ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர். ரயில்வே பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கடத்தலைத் தடுக்க அனைத்து ரயில்வே காவல் நிலையங்களிலும் உதயம் தன்னார்வலர்கள் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும், கண்காணிப்பு கேமரா இல்லாத ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் தண்டவாளத்தைக் கடக்கும்போது அதிக விபத்துகள் நேரிடுகின்றன. எங்கு அதிக விபத்துகள் நடக்கிறது என்பதைக் கண்டறிந்து, அங்கு தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என்றார். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய மேலாளர்கள் சதீஷ் சரவணன், சின்னராசு, காவல் ஆய்வாளர் லாரன்ஸ், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: