திருப்பூர். மார்ச் 1-
காங்கேயம் அருகே ஆதிக்கசாதியைச் சேர்ந்தவரின் தோட்டத்தில் ஆடு மேய்ந்தற்காக தலித் குடும்பத்தை சேர்ந்தவர்களை ஊரார் முன்னிலையில் வலுக்கட்டாயமாக காலில் விழவைத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதிக்குட்பட்ட தீத்தாம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். தலித்சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு சொந்தமான ஆடுகள், இவரது தோட்டத்திற்கு அருகில் உள்ளஆதிக்க சாதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரது தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, சக்திவேல் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேநேரம், ஆடுமேய்ந்ததற்காக சக்திவேல் குடும்பத்தினர், சரஸ்வதி குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். இருப்பினும் ஆத்திரம் அடைங்காத சரஸ்வதி, கடந்த பிப்.15 ஆம் தேதி இரவு சாதிப் பஞ்சாயத்தை கூட்டி சக்திவேல் மற்றும் அவரது மனைவி தேவி, மகள் மலர்விழியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து சக்திவேலின் மகளை ஊரார் முன்னிலையில் வலுக்கட்டாயமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.இதன்பின் சக்திவேலின் மகனை, காலில் விழச்சொல்லி சாதி ஆதிக்க சக்தியினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கடந்த பிப்.16 ஆம் தேதி காங்கேயம் காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தும் கடந்த 12 நாட்களாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இந்த புகார் மனு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு ஆதிக்க சாதி வெறியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை வலுக்கட்ட்டாயமாக காலில் விழ வைத்து துன்புறுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்திலும் கைது செய்ய வேண்டும் எனக்கோரி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சக்திவேலின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர். சாதிய ஆதிக்க சக்தியினரின் இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.