நாமக்கல், மார்ச் 1-
கரும்பிற்கு அரசு அறிவித்த ஆதார விலையை வழங்க மறுக்கும் தனியார் கரும்பு ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், கொல்லிமலை அடிவாரத்தில் வறட்டாறு வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளிடமிருந்து மரவள்ளி கிழங்குகளை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்து ஆலைகளுக்கு வழங்க வேண்டும். மேலும், பசும் பால் லிட்டருக்கு ரூ.50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.60 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டு தொகையே இன்னும் வரவில்லை.

இதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து வெண்டிபாளையம் தடுப்பணைக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை ராஜவாய்க்கால் பாசனத்தில் உள்ள வாழை பயிரை காப்பாற்ற 10 நாட்களுக்கு உயிர் தண்ணீராக திறந்துவிட வேண்டும். நாமக்கல் மாவட்டங்களில் ஆற்றில் பம்புசெட்டுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் வெண்டிபாளையம் தடுப்பாணையை கடந்து செல்வதில்லை. ஆகவே, இத்தகைய முறைகேடாக தண்ணீர் எடுப்பவர்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு வழங்க உத்தரவிட்ட ஆதாரத் தொகையை தனியார் கரும்பு ஆலைகள் வழங்காமல் காலதாமதம் செய்து வருகின்றனர். இந்த தனியார் சர்க்கரை ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் பதிலளித்து பேசுகையில், இப்போது குடிப்பதற்கே காவிரி நீரை நம்பி தான் இருக்கிறோம். குடிநீர் பிரச்சனையை சமாளிக்க முடியாத நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை. நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் முழுமையாக ஆய்வு செய்து, ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பம்புசெட்டுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். நெல் பயிருக்கு ரூ.1.17 கோடி இழப்பீடு பெறப்பட்டு ரூ.1.13 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு தொகை வழங்கப்பட்டுவிட்டது. பிற பயிர்களுக்கு ரூ.1.20 கோடி அளவுக்கு இழப்பீடு தேவை என பயிர்க்காப்பீட்டு நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையை பெற்றவுடன் பிற பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.