செங்கோட்டையின் மீதிருந்து பிரதமர் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு ஆற்றிய தன்னுடைய முதலாவது சுதந்திர தின உரையின் போது, தனது திட்டங்களை முன்வைத்ததோடு, அவற்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள உறுதியான முன்னெடுப்புகள் குறித்தும் அறிவித்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய அவர், பல துறை சார்ந்த குறிப்பான முன்னெடுப்புகளை அறிவித்ததோடு, அவற்றின் பின்னால் இருக்கும் காரணங்கள் பற்றியும் விளக்கினார். அவருடைய பேச்சில் இருந்த இந்த முன்னெடுப்புகள் தொடர்ந்து வந்த நாட்களில் பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதாகவும், பொதுவிவாதங்களில் நீண்ட காலத்திற்கு மிகுந்த ஆர்வத்துடன் விவாதிக்கப்படுபவையாகவும் இருந்தன.

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக இருந்த அத்தகைய முன்னெடுப்புகள் உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தன. அந்த முயற்சிகள் குறித்து மோடி இவ்வாறு விளக்கினார்: “நம் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றால், ‘திறன் வளர்ச்சி’ மற்றும் ‘திறமையான இந்தியா’ ஆகியவை நமது நோக்கமாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கான இந்திய இளைஞர்கள் திறமைகளைப் பெற வேண்டும், அதற்காக நாடு முழுவதிலும் பழைமையான அமைப்புகள் இல்லாத வலைப்பின்னல் இருக்க வேண்டும். இந்தியாவை நவீன நாடாக உருவாக்குகின்ற திறனை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களின் திறமைகள் பாராட்டப்பட வேண்டும், இருமுனை கொண்ட முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல நாம் விரும்புகிறோம். வேலைகளை உருவாக்கக்கூடிய இளைஞர்கள் பட்டாளம் ஒன்றை உருவாக்கவே நான் விரும்புகிறேன், வேலைகளை உருவாக்கும் திறன் இல்லாதவர்கள், அதற்கான வாய்ப்புகள் இல்லாதவர்கள் உலகின் எந்த மூலைமுடுக்கிலும் இருக்கின்ற தங்கள் சக தோழர்களை எதிர்கொள்கின்ற வகையில், தங்களுடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை வென்றெடுக்கின்ற வகையில் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். அத்தகைய இளைஞர்களின் திறனை வளர்ப்பதற்கே நாங்கள் விரும்புகிறோம்”.

பின்னர் அவர் அனைவரின் கவனத்தையும், வேலை வாய்ப்புகளை அளிக்கின்ற திறனைக் கொண்டுள்ள உற்பத்தித் துறையின் மீது திருப்பினார்: “இளைஞர்களுக்கு இன்னும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றால், உற்பத்தித் துறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று இந்த உலகில் உள்ள அனைவரையும், உலகமெங்கும் பரவியிருக்கும் இந்தியர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.  இறக்குமதி, ஏற்றுமதிகளுக்கிடையே சமநிலையை உருவாக்க வேண்டும் என்றால், நாம் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்த வேண்டும். நாம் பெற்ற கல்வியை, இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த வேண்டுமென்றால் நாம் உற்பத்தித் துறை நோக்கிச் செல்ல வேண்டும், தன்னுடைய முழு பலத்தையும் இந்த ஹிந்துஸ்தான் அதற்காக அளிக்க வேண்டும். இருந்தாலும் உலக வல்லரசுகளையும் அதற்காக நாம் அழைக்கிறோம்.

எனவே, ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’, ’வாருங்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ என்று உலகில் உள்ள அனைவருக்கும் இந்த செங்கோட்டையிலிருந்து வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் விற்றுக் கொள்ளுங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள். ஏதாவது செய்ய வேண்டுமென்ற உறுதிப்பாடு கொண்ட திறமை, மனத்திறன், ஒழுக்கம் ஆகியவை எங்களிடம் இருக்கின்றன. சாதகமான வாய்ப்பை இந்த உலகிற்குத் தர நாங்கள் விரும்புகிறோம். மின்சாரத்திலிருந்து மின்னணு வரை ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’, தானியங்கி வாகனங்களில் இருந்து வேளாண் மதிப்பு கொண்ட பொருட்கள் வரை ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’, காகிதம் அல்லது பிளாஸ்டிக் ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’, செயற்கைக்கோள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’ என்று உலகத்திடம் நாங்கள் சொல்கிறோம். எங்கள் நாடு ஆற்றல் வாய்ந்தது. வாருங்கள் என்று நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்”.

அதற்குப் பின்னர் அவர் இளைஞர்களிடம் தனது வேண்டுகோளை வைத்தார். “சகோதரர்களே, சகோதரிகளே, நாட்டிலுள்ள இளைஞர்களை, குறிப்பாக தொழில் துறையில் ஈடுபட்டிருக்கும் சிறிய அளவிலானவர்களை நான் அழைக்க விரும்புகிறேன். நமது நாட்டில் தொழில்நுட்பக் கல்வித் துறையில் வேலை செய்யும் இளைஞர்களை அழைக்க நான் விரும்புகிறேன். ‘வாருங்கள், இந்தியாவில் தயாரிக்க ‘வாருங்கள்’ என்று நான் உலகத்துக்குச் சொல்கிற போது, ‘வாருங்கள், இந்தியாவில் தயாரியுங்கள்’ என்கிற இந்தச் செய்தி உலகின் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல வேண்டும் என்பதை நமது கனவாகக் கொள்ள வேண்டும் என்பதை நமது நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடம் நான் சொல்கிறேன். இது நமது கனவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற மோடியின் தேர்தல் நேர வாக்குறுதிக்கு, இந்த “இந்தியாவில் செய்யுங்கள்” என்ற கனவு ஒரு பண்புசார் பரிமாணத்தைக் கொடுத்தது. அந்த சுதந்திர தின உரை ஆற்றி முடிந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டன. வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் குறிப்பிடும்படியான உறுதியான முன்னேற்றங்கள் ஏற்படுவதற்குப் பதிலாக, பிப்ரவரி மாதம் அவருடைய அரசாங்கத்தின் கடைசி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் வேளையில் நாட்டின் தற்போதைய உண்மை யதார்த்தத்தை பிரதிபலிக்கின்ற வகையில் பக்கோடா பொருளாதாரம் என்ற  வினோதமான சொற்றொடர் புழங்கி வருகிறது.  

பட்ஜெட்டிற்கு முன்பாக ஜனவரி மாத இறுதியில், ஜீ நியூஸ் தொலைக்காட்சி சேனலுக்கு பிரதமர் அளித்த நேர்காணலில் வேலைவாய்ப்பு குறித்து அவர் தெரிவித்த திகைப்பூட்டுமாறு இருந்த கருத்திலிருந்தே பக்கோடா பொருளாதாரம் என்ற இந்தச் சொற்றொடர் பெறப்பட்டது. உற்பத்தித் துறையில் நவீன வேலைவாய்ப்புகளை வழங்குவதில் இருந்த ஆர்வத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருந்த அந்த செங்கோட்டை உரைக்கு முற்றிலும் மாறான தொனியில், முறைசாராத் தொழில்களில் இருந்து கிடைக்கும் வேலைவாய்ப்பை முன்னிறுத்தும் வகையில் அந்த நேர்காணலின் போது மோடி பேசியதாகவே தோன்றுகிறது. இவ்வாறான வேலை வாய்ப்புகள் மட்டுமே மக்களுக்குக் கிடைக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்பட்ட அவருடைய அரசின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

“பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், 10 கோடி மக்கள், எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையைப் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று கோடி பேர் வங்கிகளிடமிருந்து முதல் முறையாக கடன் பெற்றவர்கள். முற்றிலும் புதிய மூன்று கோடிப் பேர் பொருளாதாரரீதியாக ஆற்றல் கொண்டவர்களாக மாறியுள்ளனர் என்பதே இதன் பொருள். அவர்கள் ஏதாவதொரு தொழிலில் ஈடுபட்டு சிலருக்கு வேலை கொடுப்பார்கள். இவர்களில் சிலர், ஆட்டோ ரிக்சாக்களை ஓட்டுவார்கள், பகோடா, தேநீர் அல்லது செய்தித்தாள் விற்பனை செய்யும் கடைகளை அமைப்பார்கள். வாழ்வாதாரங்களைப் பெறுகின்ற வாய்ப்புகளை இவையனைத்தும் வழங்கி இருப்பதை இது நமக்கு சுட்டிக்காட்டவில்லையா? இவற்றை வேலைவாய்ப்புகள் என்று நாம் கருதுகின்றோமா இல்லையா? உங்களுடைய ஜீ தொலைக்காட்சி ஸ்டூடியோவுக்கு வெளியே பக்கோடா விற்பனை செய்யும் ஒருவர் ரூ.200 சம்பாதித்த பிறகு மாலையில் வீட்டிற்கு செல்கிறார் என்றால், அந்த நபர் ஒருவிதத்தில் தன்னுடைய வாழ்வாதாரங்களைப் பெற்றிருப்பதாகக் கருதுவீர்களா, இல்லையா? அது ஒரு முறைசாராத் தொழில் என்பதால், அரசாங்கப் புள்ளிவிவரங்களுக்குள் அந்த நபரைப் பதிவு செய்ய முடியாது இதுபோன்ற ஏராளமானவை மக்களுக்கு கிடைக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன” என்று முத்ரா திட்டம் பற்றி பேசும் போது மோடி கூறினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது, எதிர்க்கட்சிகள் பிரதமரை விமர்சித்தன. முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் “பக்கோடாவை விற்பனை செய்வது ஒரு வேலைதான். அந்த தர்க்கத்தின் மூலம் பார்த்தால், பிச்சை எடுப்பதும்கூட ஒரு வேலைதான். இனிமேல் ஏழைகளையும், இயலாதவர்களையும் வேலைகளில் அமர்த்தப்பட்ட மக்களாக கணக்கில் கொள்ளலாம்” என்று ட்வீட் செய்தார்: இதற்குப் பதிலளித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சுமத்த முயன்றார். பாராளுமன்றத்தில் அவர் பேசுகின்ற போது, “வேலையற்று இருப்பதற்குப் பதிலாக கடுமையாக உழைக்கும் சில இளைஞர்கள் பக்கோடாவை விற்கிறார்கள் என்றால் அது நல்லது என்றே நான் நம்புகிறேன்,. பக்கோடா மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் கடினமாக உழைத்து வரும் இளைஞர்களை நீங்கள் பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டுப் பேசலாமா?” என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சிதம்பரம், பக்கோடா விற்பது என்பது ஏழைகளுக்கு கிடைத்திருக்கும் கௌரவமான சுய வேலைவாய்ப்பு, ஆனால் அதை ஒரு வேலையாகக் கணக்கில் கொள்ள முடியாது…. கடந்த மூன்று ஆண்டுகளில், எத்தனை நிலையான, முறையான, ஓரளவிற்கு பணிப் பாதுகாப்பு கொண்ட வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன  என்பது குறித்து பாஜக பதிலளிக்க வேண்டும் என்று கேட்டார்.

தன்னுடைய பேச்சிற்கான விமர்சகர்களின் கேள்விகளை முன்கூட்டியே எதிர்பார்த்த மோடி, அந்த நேர்காணலிலே முறைசார்ந்த துறை வேலைகள் பற்றிக் குறிப்பிடும் போது “நடுநிலையான நிறுவனம் ஒன்றிடமிருந்து இப்போது அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கிறது. கடந்த ஓராண்டில், முறைசார்ந்த தொழிலில் இருக்கும் ஊழியரின் பெயர் மற்றும் ஆதார் எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஊதியத்தில் இருந்து கழிக்கப்பட்ட பணம் அந்த ஊழியரின் பெயரில் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் சேமித்து வைக்கப்படுகிறது. எனவே இதில் எந்தவொரு ஊகமும் இருக்கப் போவதில்லை. அவ்வாறான ஊழியர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் 70 லட்சம் என்று இருக்கிறது. நான் 90 சதவீதம் இருக்கிற முறைசாராத் துறையைப் பற்றிப் பேசவில்லை. முறைசார்ந்த துறை பற்றியே பேசுகிறேன். இந்தப் புள்ளிவிவரங்கள் கள யதார்த்தத்தைக் காட்டுவதாக இருக்கின்றன” என்றார்.

பெங்களூரில் உள்ள ஐஐஎம் பேராசிரியர் புலாக் கோஷ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றுகின்ற டாக்டர் சௌம்யா கந்தி கோஷ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட “இந்தியாவில் சம்பளப் பட்டியல் அறிக்கை” என்ற ஆய்வில் இருந்தே மோடியின் இந்தக் கூற்றுக்கான பொருள் பெறப்பட்டது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் (EPFO), மாநில ஊழியர் காப்புறுதிக் கழகம் (ESIC), பொது வைப்பு நிதியம் (GPF), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஆகியவற்றிடம் இருந்து பெறப்பட்ட சம்பளப் பட்டியலை வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையைப் பகுப்பாய்வு செய்த அவர்கள், நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 5.9 லட்சம் (அதாவது ஒவ்வொரு வருடமும் 70 லட்சம்) பேர் சம்பளப் பட்டியலில் இருப்பதாக மதிப்பிட்டனர். நடப்பு நிதியாண்டு என்பதற்கு அவர்கள் 2017-18 நிதியாண்டை எடுத்துக் கொண்டனர். ஜனவரி 18 அன்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையில், “இந்த அனைத்து மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டு, 70 லட்சம் முறைசார்ந்த வேலைகள் வருடாந்திர அடிப்படையில் சம்பளப் பட்டியலில் சேர்க்கப்படுவதாக நாங்கள் நம்புகிறோம்” என்று அந்த இரண்டு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.

அவர்களுடைய ஆய்வில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்த இந்தக் கருத்தையே மோடி தன்னுடைய  தொலைக்காட்சி பேட்டியில் மேற்கோளிட்டுக் காட்டினார். நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இதனை தனது பட்ஜெட் உரையில் சேர்த்துக் கொண்டார். பிப்ரவரி 1 அன்று பேசிய ஜேட்லி, “வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வசதிகளை எளிதாக்குதல் ஆகியவையே எங்களுடைய முக்கியமான கொள்கைகளாக இருக்கின்றன. நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்திருக்கிறோம்” என்றார்.

  1. a) புதிய ஊழியர்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக அரசின் சார்பில் 8.33% பங்களிப்பு b) ஜவுளி, தோல் மற்றும் காலணிகள் போன்று பெரும் எண்ணிக்கையில் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் துறைகளில் புதிய ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்காக அரசின் சார்பில் 12% பங்களிப்பு c) வருமான வரிச் சட்டத்தின் கீழ் புதிய ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தில் 30 சதவிகிதம் கூடுதல் பிடித்தம் e) தேசிய பயிற்றுவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் 2020ஆம் ஆண்டிற்குள் 50 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உதவித்தொகை மற்றும் அடிப்படை பயிற்சிக்கான செலவினத்தை அரசாங்கம் வழங்குவது e) ஆடை மற்றும் காலணித் துறையில் நிலையான கால வேலைவாய்ப்பு முறைமையை அறிமுகப்படுத்துதல் f) பேறுகால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்துவதுடன், மழலையர்களைக் கவனித்துக் கொள்ளும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன என்று சொன்ன நிதியமைச்சர் முத்தாய்ப்பாக இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. இந்த ஆண்டு 70 லட்சம் முறைசார்ந்த துறை வேலைகள் உருவாக்கப்படும் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இருந்து தெரிய வந்திருக்கிறது என்று கூறினார். ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதை அரசாங்கம் அப்படியே ஏற்றுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும் இந்தக் கருத்திற்கு எதிராக மாற்றுக் கருத்துக்கள் எழவே செய்தன.

காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவரான பிரவீன் சக்ரவர்த்தி பிரன்ட்லைன் பத்திரிகையிடம் “ஓராண்டில் 70 லட்சம் முறைசார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக இந்தியாவின் சில பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்த மோசமான கருத்தை தன்னுடைய பட்ஜெட் உரையின் போது மேற்கோள் காட்டி நிதியமைச்சர் பேசியிருக்கிறார். வேலைகள் பற்றிய நிதியமைச்சரின் கொள்கை பற்றி அந்த ஆய்வு மட்டுமே பேசுவதாக இருக்கிறது. செயற்திறம் கொண்ட தொழிலாளர்கள் 66 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் என்ற கணக்கில் சேருவதாக அவர் மேற்கோள் காட்டிய அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. முறைசார்ந்த தொழிற்துறைகளில் வேலை பார்ப்பதுவே செயற்திறம் கொண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் என்பது உண்மை. அதாவது அவர்களின் கணிப்பின்படி பார்த்தால், தனக்கென்று வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற இந்தியாவில் உள்ள ஒவ்வொரு செயற்திறம் கொண்ட தொழிலாளிக்கும் வேலை கிடைத்து விடுவதாகவே இருக்கிறது என்பது நகைச்சுவை நிறைந்த கூற்றாகவே இருக்கிறது. இதனைத்தான் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் மேற்கோள் காட்டத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவரது பேச்சு என்பது வேலைகளை உருவாக்குவதற்கான கொள்கைகளை போலித்தனமான ஆய்வுகளை மேற்கோளிட்டு காட்டுவதாகவும், நாட்டில் நிலவுகின்ற வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை மறுப்பதாகவும் இருப்பது தெரிகிறது” என்று சக்ரவர்த்தி கூறினார்.

வேலையற்று இருப்பவர்கள் குறித்த சரியான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் சக்ரவர்த்தி, அதனாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனையே இல்லை எனக் கூற முடியாது என்கிறார். மேலும் “ஆதாரங்கள் இல்லாதிருப்பது, இல்லாமல் இருப்பதற்கான ஆதாரம் ஆகாது. வேலையின்மையை நாட்டை எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக, இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE), வளர்ந்து வரும் சமூகங்கள் ஆய்வு மையம் (CSDS) போன்ற நம்பகமான நிறுவனங்களின் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. முதன்மைப் பொருளாதார ஆலோசகரின் பொருளாதார ஆய்வு இந்தப் பிரச்சனை எந்த அளவிற்கு சிக்கலாக இருக்கிறது என்பதைக் குறிப்பிடுகின்றது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்களில் 87 சதவீதம் பேர் மாதமொன்றிற்கு ரூ.15,000க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் (NREGA) குறைந்தபட்ச ஊதியம் என்பது மாதத்திற்கு ரூ.6,000 ஆகும். முறைசார்ந்த துறை ஊழியர்களில் பெரும்பகுதியினர் இவ்வாறு மிகவும் குறைவாகவே சம்பாதிப்பவர்களாக இருப்பது, இருக்கின்ற வேலைகளைக் காட்டிலும் இன்னும் அதிகமாக வேலை தேடுபவர்கள் இருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது. இது மிகவும் அடிப்படையான பொருளாதாரம் சார்ந்தது. இப்படி இருக்கின்ற சூழலில், இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சினையே இல்லை என்றும், செயற்திறம் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிக வேலைகளை நாங்கள் உருவாக்குகிறோம் என்றும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல முடிகிறது? அவ்வாறு சொல்வது முற்றிலும் அபத்தமாக இருக்கிறது” என்று சக்ரவர்த்தி கூறினார்.

வேலைகள் பற்றி அரசாங்கம் தனக்குத்தானே அளித்துக் கொண்ட வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல. சமீபத்திய பொருளாதார ஆய்வுகளின் தொனி பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஏற்றுக் கொண்ட கருத்துக்களுக்கு மாறாக மிகக் கடுமையாக இருந்தது. மோடியின் பக்கோடா மற்றும் சுயவேலைவாய்ப்பு பற்றிய கருத்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய சில தினங்களுக்குள்ளாகவே 2017-18க்கான பொருளாதார ஆய்வு வெளியானது. “இருக்கின்ற மற்றுமொரு பிரச்சினையாக வேலைவாய்ப்பு என்பது இருக்கிறது. சீரான, விரிவான, தற்போதைய தரவுகள் கைவசம் இல்லாததால், இது குறித்த தீவிர மதிப்பீட்டை மேற்கொள்ள இயலவில்லை. இருந்தபோதிலும், இந்தியாவின் இளைய மற்றும் வளர்ந்து வருகின்ற தொழிலாள சக்திகளுக்கு சிறந்த உயர் உற்பத்தித்திறன் கொண்ட வேலைகளை வழங்குவது என்பது நடுத்தர காலச் சவாலாகவே இருக்கிறது. இதற்கான பயனுள்ள பதில் என்பது பல நெம்புகோல்களையும், உத்திகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக வலுவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கும் இரண்டு உண்மையான கருவிகளாக தனியார் முதலீடுகள், ஏற்றுமதிகள் ஆகியவை இருக்கின்றன” என்று அந்தப் பொருளாதார ஆய்வு தெரிவித்திருந்தது.

இந்தப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பிற்கு கணிசமான ஊக்கத்தைக் கொடுப்பதாக தற்போதைய அரசாங்கத்தின் இறுதிப் பட்ஜெட் இருக்கும் என்று இருந்த அதிகமான எதிர்பார்ப்புகளுக்குப் பின்னால் இந்த “நடுத்தர-கால சவால்” இருந்தது. இந்த எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும், 2018ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் குறித்து தில்லியில் இருக்கும் பட்ஜெட் மற்றும் ஆளுமைக்கான பொறுப்பு மையத்தின் (CBGA) அறிக்கையில், “மொத்தத்தில் பட்ஜெட் மூலமாக வேலைவாய்ப்பிற்கான ஊக்கமளிப்பு என்பது பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலமாக நடைபெறும் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட கட்டுமானப் பணிகளில் இருந்து வருவதாகவும், கடன் சார்ந்த தொழில் முனைவோர் மாதிரிகளை ஊக்குவிப்பதன் மூலம் சுயவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் இருக்கின்றன. பல சிறிய சலுகைகளை அளிப்பதன் மூலமாக ஏற்படுகின்ற வேலை வாய்ப்புகளை முறைசார்ந்ததாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டு அவற்றை புதிதாக உருவாக்கப்பட்ட முறைசார்ந்த துறை வேலைகள் என்று கூறினாலும், புதிய வேலைவாய்ப்புகளாக அவற்றைக் கருத முடியாது. விவசாயமல்லாத தொழிற்துறைகளைப் புதுப்பிப்பதற்கும், பொருளாதாரத்தில் நீண்ட கால வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்குவதற்கும் அவசியமானதாக இருக்கும் தொழிலாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தொழில்களுக்கு பொது முதலீட்டை அதிகரிப்பதற்குத் தேவையான ஊக்குவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க அளவிற்கு சமாளிக்க முடியாதவையாகவே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால்கள் இந்த அரசாங்கத்தின் இறுதியாண்டில் நீடித்து வருகின்றன. உற்பத்தித் துறை வேலைகளை அதிகரிப்பது என்பதாக மோடியின் ஆரம்பகால வாக்குறுதி, உலகளாவிய வேலைகளுக்குத் தகுதி வாய்ந்தவர்களாக நாட்டின் இளைஞர்களை உருவாக்குவதாக அவருடைய நோக்கம் ஆகியவை இருந்த போதிலும், பெருகியிருக்கும் வேலையின்மை என்ற கடுமையான யதார்த்தம் சீரடைவதற்கான சாத்தியம் இப்போது இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நன்றி:http://www.frontline.in/cover-story/pakodas-promises/article10073925.ece 

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.