2018 பிப்ரவரி 19 நேபாளத்தின் ஜனநாயகத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்பு தினமாகும்.  உலகின் ஒரே இந்து நாடு என்று இந்துமத வெறியர்கள் பீற்றிக்கொண்டிருந்த நேபாள நாட்டில் அன்றுதான் நேபாளத்தில் செயல்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்றிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே பெயரில் இயங்கத் தொடங்கி இருக்கின்றன.  ஆம், நேபாளத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட நேபாள ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ் கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் மைய கம்யூனிஸ்ட் கட்சியும், தேர்தல் சமயத்தில் அளித்திருந்த உறுதிமொழிக்கிணங்க தற்போது நேபாள கம்யூனிஸ்ட் கட்சி  (CPN-Communist Party of Nepal) என்று ஒரே பெயரில் இயங்கிட முடிவு செய்துவிட்டன.
இதன்படி இரு கட்சிகளும் ஓர் ஏழு அம்சங்களை முன்வைத்து ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கின்றன. அவை வருமாறு:
1. இனிவருங்காலங்களில் கட்சியின் பெயர் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி என்பதாகும்.
2. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டும் தத்துவம், மார்க்சிசம்-லெனினிசமாகும்.
3.   கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு என்பது ஒருங்கிணைந்த  மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைர் மதன் பண்டாரி முன் பிரேரேபித்திருந்த மக்களின் பல கட்சி  ஜனநாயக அடிப்படையை (People’s Multiparty Democracy)க் கொண்டிருக்கும்.
4. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும், மாவோயிஸ்ட் மைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் உரிய பேச்சுவார்த்தைகளின் மூலமாக, மேற்படி மக்களின் பல கட்சி ஜனநாயகத்தை மாற்றியமைத்திடவும் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
5. மேற்படி நிலைமைகளின்படி ஒருங்கிணைந்த கட்சி தன்னுடைய இடைக்கால அரசியல் அறிக்கையையும் இடைக்கால அமைப்புச் சட்டத்தையும் தயாரித்திடும்.
6. அதேபோன்று, கட்சி, நாட்டில் இதுவரை பெற்றிருக்கின்ற சாதனைகளைப் பாதுகாப்பதன் மூலமாக சோசலிசத்திற்கான அடித்தளங்களையும் உருவாக்கிடும். அதன் அடிப்படையில் நாட்டின் தேசியவாதம், ஜனநாயகம் மற்றும் சமூகநீதியை வலுப்படுத்திடும், புதிய பொருளாதார மாற்றத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்றிடும்.
7.  கட்சி, நடைபெறவிருக்கும் பொது சிறப்புமாநாட்டை, ஒற்றுமை சிறப்பு மாநாடாக இறுதிப்படுத்திடும்.
இதற்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையொப்ப மிட்டிருக்கிறார்கள்.
இரண்டு குழுக்கள்
இரு கட்சிகளுக்கும் இடையேயிருந்துவரும் ஸ்தாபனப் பிரச்சனைகள் மற்றும் அரசியல் தத்துவார்த்த பிரச்சனைகளைப் பேசி, சரிசெய்வதற்காக இரு கட்சிகளும் இணைந்து இரு குழுக்களை அமைத்துள்ளன. இக்குழுக்கள் ஒவ்வொன்றிலும் பத்து உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஐந்து உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இக்குழுக்கள் பதினைந்து நாட்களுக்குள் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பெற்று,  இரு கட்சிகளுக்கும் இடையேயிருந்துவரும் கருத்துவேறுபாடுகள் சரிசெய்யப்பட்டபின்னர், வரும் மார்ச் 21க்க முன்பு கட்சியின் இணைப்பு குறித்து மிகப்பெரிய அளவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

-ச.வீரமணி

Leave a Reply

You must be logged in to post a comment.