நாகர்கோவில்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிக்கு வரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும், அரசு அறிவித்துள்ள தினக்கூலி 205 ரூபாயை குறைக்காமல் வழங்க வேண்டும், நீர் நிலைகள், ஓடைகள், குளங்கள், புது சாலைகள் அமைக்க ஊராட்சிகளில் வேலை வழங்க வேண்டும், இத்திட்டத்தை நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் மலைவிளை பாசி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி. விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், சிவானந்தம், சாகுல் ஹமீது, கே.எஸ்.லட்சுமி, சுயம்புகனி, பேபி மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும், வாராவாரம் சம்பளத்தை வேலை இடத்தில் வங்கி முகவர் மூலம் வழங்குவதுடன், சம்பள பாக்கிகளை உடனே வழங்க வேண்டும், வேலை கொடுக்க மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.