தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கப்பல்தளம் 9-ல் ஒரே நாளில் 53ஆயிரத்து 260 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக துறைமுகபொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 21.02.2018 அன்று கப்பல் சரக்குதளம் 9இல் எம்.வி ஜோகனா ஓல்டன்டோர்ப் என்ற கப்பலிலிருந்து 53 ஆயிரத்து 260 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் கையாண்டு இதற்கு முந்தைய சாதனையான 16.11.2017 அன்று இதே கப்பலிலிருந்து கையாளப்பட்ட அளவான 50 ஆயிரத்து 118 மெட்ரிக் டன்களை விட அதிகமாக கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. துறைமுகத்தின் ஒரே நாளில் அதிகளவு கையாளப்பட்ட சுண்ணாம்பு கல் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாதனையின் கப்பல் முகவர்கள் பியல் சிப்பிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட் மற்றும் கப்பல் கையாளும் முகவர்கள் செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் ஆவார்கள். கடந்த நிதியாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 11லட்சத்து 09ஆயிரத்து 486 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் கையாண்டுள்ளது. இந்த நிதியாண்டு 2018 பிப்ரவரி மாதம் வரை 11 லட்சத்து 87ஆயிரத்து 836 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கல் கையாண்டுள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இறக்குமதியாகும் சுண்ணாம்புக் கல் சிமெண்ட் மற்றும் காகித தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் சுண்ணாம்புக் கல் ஒமன், ஈரான், மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஜெயகுமார், சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் பாராட்டினார். இந்த நிதியாண்டு 26.02.2018 வரை 32.72 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.