====சி. ஸ்ரீராமுலு====                                                                                                                                                                   பிப்ரவரி 19 காலை… செய்தித் தாள்களில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ஒண்டிபிட்டா ஏரியில் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தவர் 5 பேரின் உடல்களை ஆந்திர காவல்துறை மீட்டதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த சில வருடமாக கடுமையான வறட்சி. மலையும் மலை சார்ந்த பகுதிகளும் தப்பவில்லை. விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போய்விட்டது.மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடதுசாரிகளின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இத்திட்டம் அநேகமாக எந்த மலைகளிலும் முறையாக அமல்படுத்தப்படவில்லை.வன உரிமைச் சட்டம் 2006-இல் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பிறகு, 2016இல் உச்சநீதிமன்றமும் தலையிட்டது. ஆதிவாசி மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் நிலங்களுக்கு நில உரிமை வழங்க வேண்டும். பழங்குடி மக்களின் நலத் திட்டங்களை முறையாக அமலாக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கின.
வானமும் பொய்த்தது; ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. பசி, பட்டினியால் வயிற்றுப் பிழைப்புக்கு எந்த கூலி வேலையும் செய்தாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர் மலை மக்கள். வேலை தேடி சொந்த மலைகளை விட்டு வெளியேறி வெளி மாநிலங்களுக்கு சென்றனர்.
இப்படித்தான் கடந்த 2015 ஆண்டு செம்மரக் கட்டைகளை தூக்கிச் சென்று லாரிகளில் ஆம் ஏற்றிட கூலிக்காக இடைத்தரர்கள் மூலம் திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் மலைக்கிராம மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அச்சமயம்தான் திருப்பதி ஸ்ரீசைலம் வனப் பகுதியில் தமிழகக் கூலித் தொழிலாளிகள் 20 பேரை ஆந்திர மாநில வனத்துறையினர் கொடூரமாக சுட்டுக் கொன்றனர். உண்மையில் இது படு பயங்கரமான போலி என்கவுண்ட்டர் படுகொலைகளே என்பது பின்னர் தெரியவந்தது. ஆனால் தமிழக அரசு வாயை மூடிக் கொண்டிருந்தது. அப்பாவி தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த கொடூரச் சம்பவத்தின் ரணம் இன்னமும் மறையவில்லை.
அதற்குள் இன்னொரு பிணவாடையா? என்று தமிழக மலைகளில் வசிக்கும் மக்களின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம். இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான பி. டில்லிபாபுவை தொடர்பு கொண்டோம் அங்கு உண்மையில் நடந்தது என்ன?
ஆந்திராவுக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களை அதிலும் குறிப்பாக பழங்குடி மக்களை ஆந்திர வனம் மற்றும் காவல்துறையை சேர்ந்த சிலர் காக்கை குருவிகளைவிட மிகவும் கேவலமாக நடத்துவது ஏன்? ஒண்டிபிட்டா ஏரியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று ஆந்திர மாநில காவல்துறையினர் அடையாளம் கண்டது எப்படி?
தமிழக காவல்துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர் ஆந்திராவுக்கு செல்வதற்கு முன்பாகவே பிரேத பரிசோதனையை செய்து முடித்தது ஏன்?
தமிழக அரசும் காவல்துறையும் வாய்மூடி மவுனிகளாக இருப்பது ஏன் என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
விலைபேசிய அரசியல் பிரமுகர்
இம்மாதம் 16 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைச் சேர்ந்த கிராங்காடு முருகேசன் என்ற இடைத் தரகர் தலைமையில் சேலத்திலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் மூலம் கூலி விலை பேசப்பட்டு பட்டிமேட்டில்(கீழ்நாடு) 13 பேர், கிராங்காட்டில் 30 பேர் கல்லூர், சேம்பூரில் தலா 4 பேர், ஆவாரை, அடியனூர், மூலக்காடு ஆகிய கிராமங்களில் தலா 2 பேர் வீதம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திற்கு மலைவாழ் கூலித் தொழிலாளர்கள் 70 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிதறிய தொழிலாளிகள்
கடப்பா அருகே அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் பட்டினியாகவே இருந்துள்ளனர். இரண்டாவது நாள் ஆந்திர மாநில இடைத் தரகர்கள் மூலமாக 2 டிப்பர், லாரிகளில் 70 கூலித் தொழிலாளிகளையும் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்த தகவல் வனத்துறைக்கு கிடைத்ததையடுத்து, வனத்துறையினர் விரட்டிச் சென்று அந்த லாரிகளை மடக்கி தமிழகத் தொழிலாளிகள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து உயிர் தப்பினால் போதும் என்று நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர் தமிழகத் தொழிலாளிகள்.
நீடிக்கும் மர்மம்
இந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகுதான் அடியனூர் முருகேசன் (42), ஜெயராஜ் (25), கிராங்காடு முருகேசன் (42), சின்னப்பையன் (45), கீழ் ஆவரை கருப்பண்ணன் (23) ஆகியோரது சடலங்கள் கடப்பா மாவட்டம் ஒண்டிபிட்டா ஏரியில் மிதந்துள்ளன. ஒருவர் மட்டும் தப்பி பிழைத்து சொந்த ஊர் வந்துள்ளார். அவர் பெயர் முருகேசன். மற்ற 64 பேரின் கதி என்ன வென்று இதுவரைக்கும் தெரியவில்லை. உயிரோடு இருக்கிறார்களா? என்கவுண்ட்டரில் சுட்டுத் தள்ளிவிட்டார்களா? சிறைகளில் அடைத்து வைத்துள்ளார்களா? என்ற மர்மம் நீடிக்கிறது.
சந்தேகம்
ஏரியில் மிதந்த கூலித் தொழிலாளர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்து தமிழகத்திற்கு எடுத்துச் செல்ல ஆந்திர மாநில காவல்துறையினர் சேலம் மாவட்ட காவல்துறைக்கு அளித்த தகவலின்பேரில் காவல்துறை ஆய்வாளர் உமாசங்கர், அரசு சிப்பந்திகள் சிலரும் மலை வாழ் கிராமங்களுக்கு சென்று, பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளனர். அடுத்த நிமிடமே ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.
5 பேரின் உடல்களையும் சொந்த ஊருக்கு கொண்டு வரும்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படலாம் என்பதால் சூரிய மூர்த்தி, ராஜேந்திரன் ஆகிய இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டது. பிப்ரவரி 21 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட 5 பேரின் உடல்களையும் அரை மணி நேரம் கூட அங்கு வைக்கவிடவில்லை காவல் துறையினர். அவசர அவசரமாக எடுத்துச் சென்று ஒருவரின் உடலை எரித்து விட்டனர். மற்ற நான்கு பேரின் உடல்களையும் அடக்கம் செய்தனர். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எலும்பும்-ரத்தவாடையும்
தருமபுரி மாவட்டம் அரூர் சித்தேரி மலை தோல்தூக்கி கிராமத்திலிருந்து கூலி வேலைக்காக ஆந்திரா சென்ற வெங்கட்ரமணாவை அடித்து கிணற்றில் வீசினர். அவரது மனைவி அழகியிடம் ரூ.40 ஆயிரம் கொடுத்து அந்த சம்பவத்தை மூடி மறைத்தனர். இப்படியாக இன்னும் பல கிணறுகளில், ஏரிகளில், காடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள், விவசாயத் கூலித் தொழிலாளிகளின் எலும்புகள் மிதந்து கொண்டும் ரத்தவாடை அடித்துக்கொண்டும் இருக்கிறது.
மாபியாக்களுக்கு சலுகை
தமிழகத்தில் இருந்து திருப்பதி கோவிலுக்கு செல்லும் பழங்குடி மக்களை சந்தேகம் என்ற பெயரில் செம்மரம் வெட்ட வந்த கும்பல் என்று பேருந்து நிலையம், பேருந்து பயணம், உணவகங்களில் நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறையில் அடைப்பது, வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலைக்குச் செல்லும் மலை வாழ் மக்களை சுட்டுக்கொல்வது, கொடூரமாகத் தாக்குவது, விரட்டியடிப்பதையே ஆந்திர மாநில காவல்துறையும், வனத்துறையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. அதேசமயம், செம்மரக் கடத்தலுக்கு தலைமை தாங்கும் மாபியா கும்பலில் ஒருவரைக்கூட ஆந்திர அரசும் காவல்துறையும் கைது செய்து தண்டனை வழங்கவில்லை.தற்போதும், ஆந்திர சிறைகளில் தமிழ்நாட்டை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், அப்பாவி பழங்குடி மக்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறைகளில் வாடுகிறார்கள். இவர்களில் பலர் ஒரு வருடம் முதல் இரண்டு வருடகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் ஆந்திராவில் உள்ள செம்மரக் கடத்தல் கும்பல், வியாபாரிகளுடன் கைகோர்த்துள்ளனர். இந்த தொடர்பே தமிழக அரசின் மவுனத்திற்கு காரணமாக இருக்கலாம்? என்றார் டில்லிபாபு.
பெட்டிச் செய்தி
முதல்வரின் சொந்த மாவட்டத்தில்….
ஆந்திர மாநில ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட 5 பேரும் தமிழக முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள். அவர்களது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.கடந்த 2015இல் ஆந்திர போலீசும் வனத்துறையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது போல் சேலம் மாவட்ட கல்வராயன் மலை மக்களையும் சுட்டுக்கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்ற பல சந்தேகம் எழுந்திருப்பதால் அவசியம் உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும். அதன்மூலம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.
மத்திய புலனாய்வுக்கழக விசாரணை தேவை
கூலி வேலைக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்லும் அப்பாவி பழங்குடி-கூலித் தொழிலாளர்களின் உயிர்களை பாதுகாக்க அனைத்து மலைப் பகுதிகளிலும் வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சரவணன் கூறுகிறார். “கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மலைப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை முறையாக அமல்படுத்தி பழங்குடி மக்களுக்கு வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயம் செய்ய பாசன வசதிகள் செய்து கொடுப்பதுடன் புதிதாக கிணறு வெட்டவும் பம்பு செட்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வசதி செய்து தரவும் வேண்டும்” என்றார்.தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை, சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலை, விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை போன்ற மலைப் பகுதிகளில் மலை மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆந்திர மாநில ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தமிழக கூலித் தொழிலாளிகளின் மரணத்தில் மர்மம் இருப்பதால் இந்த வழக்கு இரு மாநிலங்கள் சார்ந்த பிரச்சனையாகும். எனவே, மத்திய புலனாய்வுக்கழக விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். இந்த சம்பவத்தை தாழ்த்தப்பட்டோர் பழங்குடி மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஆந்திரச் சிறைகளில் உள்ள அப்பாவி கூலித் தொழிலாளர்களையும், பழங்குடி மக்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார் சரவணன்.
நீதிகேட்டு போராட்டம்
ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட தமிழக பழங்குடியினத்தை சேர்ந்த 5 கூலித் தொழிலாளர்கள் பிரச்சனையில் நீதிகேட்டும், இந்த வழக்கை மத்திய புலனாய்வுக்கழக விசாரணைக்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மார்ச் 2 அன்று முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் கருமந்துறையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் சங்கத் தலைவர்கள் பெ.சண்முகம், பி.டில்லிபாபு, சரவணன், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.