மும்பை:
நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு ஒப்பந்தம் பற்றி எவ்வித பேச்சுவார்தை இல்லாமல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) காலத்தை நகர்த்திக் கொண்டே சென்றது.
இதனால் விரக்தியடைந்த கேப்டன் விராட் கோலி,தோனி,பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் இணைந்து வீரர்களுக்கான சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பே வலியுறுத்தினார்கள். இந்நிலையில்  இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தின் இறுதி முடிவில் வீரர்களின் சம்பள உயர்வுக்கான ஒப்பந்தம் பற்றிய முழு விபரமும் விரைவில் அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாயுள்ளன.இந்திய கிரிக்கெட் அணியில் ஏ,பி மற்றும் சி என மூன்று கிரேடுகள் அடிப்படையில் வீரர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள்.வீரர்களை தரம் பிரித்து அதற்கேற்ப சம்பள விகிதம் அறிவிக்கப்படும்.புதிய சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்திற்கு தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். ‘ஏ’ கிரேடில் உள்ள வீரர்களின் சம்பளம் ரூ.12 கோடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.தற்போது இருக்கும் 3 (ஏ,பி,சி) கிரேடுகளை மாற்றி நான்கு கிரேடுகளாக அதிகரிப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.இதனால் வீரர்களின் திறமைக்கு ஏற்ப இனி சம்பள பட்டியல் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.