சென்னை:
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து என்ன சாதித்தீர்கள் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆர்.கே.நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “மத்திய அரசிடம் தமிழக அரசு அடிபணிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்கமுடியாது; மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்தால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்” என்று கூறினார்.

இந்நிலையில் கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு அப்படி என்ன வாங்கிக் கொடுத்துவிட்டீர்கள்” என்று கேள்விக்கணை தொடுத்தார்.
“தமிழக அரசு மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலை கூடாது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து திட்டங்களை பெறுகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவரை இணக்கமாக இருந்து என்னென்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். நீட் தேர்வில் கடைசி வரை தமிழகம் வஞ்சிக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை; ஒக்கி புயலுக்கு நிவாரணம் தரவில்லை, வறட்சி, வெள்ள நிவாரணத்திற்கும் பணம் தரவில்லை; மண்ணெண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவில்லை; அரிசி விலையை உயர்த்திவிட்டனர்; தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பாக்கி பணம் ரூ.7200 கோடியை தரவில்லை; இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு என்ன வாங்கி கொடுத்துவிட்டீர்கள். இணக்கமாக இருப்பது பதவியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் பயன்படலாம். தமிழக மக்களுக்கு பயன்படாது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், விவசாயிகள் சங்கங்களும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். இந்த அரசை நம்பி பலனில்லை என்கிற சூழ்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்” என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

கடலூரில் நடப்பது என்ன?
கடலூர் மாவட்ட ஆட்சியர் 6 மாதங்களுக்குள் மாற்றப்பட்டுள்ளார். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் ஆட்சியர் நியமித்தார். தற்போது கால்நடை உதவியாளர்கள், ரேஷன்கடை பணியாளர்கள் நியமனங்கள் உள்ளன. இவர் இருந்தால் ஆளும் கட்சியினர் கல்லாக்கட்ட முடியாது என நினைத்து அவரை உடனடியாக மாற்றிவிட்டனர். புதிய ஆட்சியர் வந்த அடுத்த நாளே புதிய நியமனங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறுவது சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

தலித் மக்களைப் பாதுகாப்போம்
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகிற நிலை உள்ளது. சமூக விரோதக் கும்பல் இதை செய்கிறது. வெள்ளயாம்புத்தூர் கிராமத்தில் தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் 3வது ஆகும். தேவைப்பட்டால் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முடிவிற்கு செல்வோம். இதை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான மோதலாக மாற்றக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.உதயகுமார், வி.சுப்புராயன், ஒன்றியச் செயலாளர் ஜே.ராஜேஷ் கண்ணன், அலுவலக செயலாளர் ஆர்.தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்படும் தமிழகத் தொழிலாளர்கள்
சிபிஎம் குழு நேரில் ஆய்வு
ஆந்திராவில் செம்மரக்கடத்தல் தடுப்பு என்ற பெயரில் தமிழக தொழிலாளர்கள் – குறிப்பாக மலைவாழ் தொழிலாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கே.பாலகிருஷ்ணன், மேற்கண்ட சம்பவங்கள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக்குழு நேரடி ஆய்வு நடத்தும் எனவும் தெரிவித்தார்.

“சேலம், விழுப்புரம், கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் தொடர்ந்து சுட்டுப்படுகொலை செய்யப்படுகிறார்கள். பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். எனவே இதுதொடர்பாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், அரூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகிய ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழு மார்ச் 2 மேற்கண்ட மலைப்பகுதிகளுககுச் சென்று நேரடி ஆய்வு நடத்தும் விசாரணைக்குழுவின் ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் வழங்கி, அதன்மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: