சென்னை:
புகழ்பெற்ற திரைக்கலைஞர் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.அந்தேரியில் உள்ள ரிகிரியேசன் கிளப்பிலிருந்து, புறப்படும் இந்த ஊர்வலம் வில்லே பார்லே மைதானத்தில் நிறைவடைகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, 12 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.ஸ்ரீதேவியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாடு முழுவதிலுமிருந்து, முன்னணி திரைக்கலைஞர்கள், இயக்குநர்கள், சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர். ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.இவர்கள் அந்தேரி ரிகிரியேசன் கிளப்பில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

தமிழ்நாட்டிலிருந்து தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய ஸ்ரீதேவி, ஒட்டுமொத்த இந்திய திரை வானிலும் நட்சத்திரமாக ஒளி வீசினார். சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்ட அவர், சுமார் 30 ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் தனது அபார நடிப்பாற்றலை வெளிப்படுத்தி புகழ்பெற்றார். ஹிந்தி படங்கள் மூலம் பாலிவுட் ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்றார்.பின்னர், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். வசிப்பிடத்தையும் மும்பைக்கே மாற்றினார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தனர். எனினும் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வந்தார். இந்நிலையில், துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில், தான் தங்கியிருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஹோட்டல் அறையில், குளியல் தொட்டி நீரில் மூழ்கி, ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

துபாய் நாட்டின் சட்ட விதிகளின்படி, மருத்துவமனையில் அல்லாமல் பிற இடங்களில் இறப்பவர்களின் உடல், தீவிர விசாரணைக்குப் பிறகே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். உடல்கூராய்வு மற்றும் தடயவியல் சோதனையும் நடத்தப்படும். இதனால் ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக துபாய் போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிணவறையில் கிடங்கில் வைக்கப்பட்டது. இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் ஸ்ரீதேவிக்கு உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. எனினும், ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ஸ்ரீதேவி தங்கி இருந்த ஹோட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையையும் பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட கதவையும் ஆய்வு செய்தனர்.
அதன்பிறகு போனி கபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.போனிகபூரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் போனி கபூரின் மைத்துநரும், மணமகனுமான மோகித் மார்வா குடும்பத்தினரையும் விசாரித்தனர்.

பின்னர், அவர்கள் தாங்கள் நடத்திய விசாரணை அறிக்கை மற்றும் உடற்கூராய்வு அறிக்கையை நாட்டின் உயர் மட்ட விசாரணை அமைப்பான “துபாய் பப்ளிக் பிராசிக்கியூஷன்” எனப்படும் விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஹோட்டல் அறையில் உள்ள சிசிடிவி-யில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. ஸ்ரீதேவி செல்போனையும் கைப்பற்றி அதில் பதிவான எண்களில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஸ்ரீதேவி மரணத்துக்கு முன் 24 மணி நேரம் வரை அவருடன் யார் – யார் பேசினார்கள் என்ற விவரத்தை சேகரித்து அதில் கிடைத்த தகவலும் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு போனி கபூரிடம் விளக்கங்களைப் பெற்றனர். பின்னர், திங்களன்று மாலை போனிகபூரிடம் ஸ்ரீதேவியின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் உடலை ஒப்படைப்பதில் துபாய் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து தாமதம் செய்து வந்தனர்.
“சந்தேகத்துக்கு இடமின்றி மரணம் நிரூபிக்கப்பட்டால் தான் உடல் ஒப்படைக்கப்படும்; தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனைசெய்வோம். மறுவிசாரணையும் நடத்துவோம்” என்றும் தெரிவித்து இருந்தனர்

இந்நிலையில், “ஸ்ரீதேவியின் மரணம் எதிர்பாராதவிதமாக குளியல் தொட்டியில் விழுந்ததால் ஏற்பட்டுள்ளது” என்று கூறி வழக்கின் விசாரணையை முடித்துக் கொள்வதாக செவ்வாய்க்கிழமையன்று துபாய் போலீஸார் அறிவித்தனர். ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்துவதற்கான அனுமதி கடிதத்தையும் வழங்கினர்.அதைத்தொடர்ந்து, எம்பார்மிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் துபாய் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இரவு 10 மணிக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், முதலில் மும்பை அந்தேரியில் உள்ள வீட்டிலும், பின்னர் புதன்கிழமை காலை 6 மணிக்கு ரிகிரியேசன் கிளப்பிலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: