சென்னை:                                                                                                                                                                                    இரயில்வே நிர்வாகத்தின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் விரோதப் போக்கைக் கண்டித்து எமது சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் முப்பதுக்கும் மேற்பட்ட முக்கிய இரயில் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெற்றுள்ளன. இப்போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டு 2000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு பல்நோக்கு அடையாள சான்று வழங்குவதை இரயில்வே நிர்வாகம் ஏற்காமல் தனியாக அடையாள சான்று தருவதை நிறுத்த வேண்டும், 40 சதவீத ஊனமுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய சலுகை கட்டணம் வழங்க வேண்டும், அனைத்து இரயில் நிலையங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் தடையில்லா சூழலுடன் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச நாடு தழுவிய கோரிக்கைகளுக்காக 06.03.2018 அன்று டெல்லி இரயில் பவன் முன்பாக ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் திரண்டு தர்ணா போராட்டம் நடைபெற உளௌது. டெல்லி போராட்டத்திற்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியாக செய்யவேண்டிய கோரிக்கைகளை முன்னிறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் முடிவு செய்திருந்தது.
அதன்படி சென்னை தாம்பரத்தில் தென் சென்னை மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டார். மாநிலக்குழு உறுப்பினர் பாபு உள்ளிட்ட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
இராமநாதபுரம் இரயில் நிலையம் முன்பாக மாவட்ட செயலாளர் பி.கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தருமபுரி இரயில்யி நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்செந்துர் இரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயலாளர்களில் ஒருவரான தோழர் பி.ஜீவாவும், திருப்பாப்புலியர் இரயில் நிலையம் முன்பாக மாநில செயலாளர் பேரா.ராஜாவும், திருப்பூர் இரயில் நிலையம் முன்பாக மாநில செயலாளர் ஜெயபால், பழனியில் மாநில செயலாளர் பகத்சிங், உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நெல்லை, மதுரை, திருச்சி, சிவகங்கை விழுப்புரம், திண்டுக்கல், பழனி, ஈரோடு, திருவண்ணாமலை, சாமல்பட்டி, கோவில்பட்டி, கோவை, நாகை, மயிலாடுதுரை, காட்பாடி உள்ளிட்ட இரயில்நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி போராட்டங்கள் நடத்தி இரயில் நிலைய மேலாளர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
இப்போராட்டங்களில் இயில் நிலையங்களில் பெயரளவுக்கு உள்ள மாற்றுத்திறனாளிக்கான டிக்கட் கவுண்டரை திறந் எப்போதும் திறந்து செயல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளி வாகனங்களுக்கான இலவச பார்க்கிங், உரிய கழிப்பறையுடன்கூடிய ஓய்வறை, பார்வையற்றோருக்கான டாக்டைல் தரை, காதுகேளாத பேசமுடியாதோருக்கான டிஸ்ப்ளே போர்டுகள் உரிய வகையில் வைக்க வேண்டும்.
இரயில்பெட்டியின் உள்ளே சக்கர நாற்காலிகள் செல்லும் வகையில் நடைமேடைகள் அமைக்கவும், மாற்றுத்திறனாளி பெட்டிகள் எங்கே உள்ளன என்பது பற்றிய அறிவிப்பு வாய்மொழியாகவும், டிஸ்ப்ளே வழியாகவும் தெரிவிக்க வேண்டும். எல்லா நடைமேடைக்கும் சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பாக சென்றுவர உரிய சாய்வுதளங்கள் கைப்பிடிகளுடன் அமைக்க வேண்டும்.
சக்கர நாற்காலிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்நேரமும் தடையில்லாமல் கிடைக்கவும், இலவச பேட்டரி கார் வசதி ஏற்படுத்தவும் வேண்டும். நடைமேடைகளில் மாற்றுத்திறனாளிக்கான கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.
இரயில்பயணிகள் நல ஆலோசனை கூட்டங்களின்போது எங்கள் சங்கப் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும். இரயில் நிலைய ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முடியாதவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இப்போராட்டங்களில் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.