ஜி.ஆனந்தன். சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்.                                                                                                                   கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் உலவிக்கொண்டிருப்பது வெள்ளம்புத்தூர் சம்பவமாகும். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள சிறு கிராமம் வெள்ளம்புத்தூர். இக்கிராமத்தில் ஏழை தலித் குடும்பத்தைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணான ஆராயி(45), மகள் தனம் (15), மகன் சமயன்(9) ஆகியோர் தலித் மக்கள் வசிக்கும் பகுதியின் இறுதியில் கடைசியாக உள்ள தமது தொகுப்பு வீட்டில் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த சம்பவம்.

கடந்த 21.2.2018ஆம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் பக்கத்து வீட்டில் பேசிக் கொண்டிருந்துவிட்டு படுக்கப் போகிறோம் என்று சொல்லிட்டு தமது வீட்டின் உள் தாழ்ப்பாள் இல்லாத கதவை மூடிக்கொண்டு மூவரும் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் 22ஆம் தேதி காலை எப்பொழுதும் தண்ணீர் பிடிக்க தன்னை வந்து எழுப்பும் தனம் இன்னும் வரவில்லையே என தனத்தின் சினேகிதி, அவ்வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே இருந்த கொடூரமான காட்சியைப் பார்த்து அலறி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இளந்தளிர் சமயன் கொடுங்காயங்களோடு பிணமாகக் கிடக்கிறான். தாயும் மகளும் ரத்த வெள்ளத்தில் அலங்கோலமாகக் கிடக்கின்றனர்.

உடனடியாக திருக்கோவிலூர் பின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கின்றனர்.அங்கேயோ அந்த நேரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எனக்கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய், மகள் இருவருக்கும் நினைவு திரும்பவில்லை. இதில் மகளின் பிறப்புறுப்பில் 12 தையல் போடப்பட்டிருப்பதிலிருந்தே நடந்த கொடுமையை புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் வரையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரோ அல்லது துணைக்கண்காணிப்பாளரோ சம்பவ இடத்திற்கே செல்லவில்லை என்பதிலிருந்தே மாவட்ட காவல்துறையின் அலட்சியத்தை அளந்திட முடியும்.இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். 24 ஆம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.கே தமிழ்ச்செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ஆறுமுகம், எஸ். வேல்மாறன், வட்டச் செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் வெள்ளம்புத்தூர் கிராமத்திற்கு சென்று மேற்படி ஆராயியின் மகன், மருமகள், மகள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் நேரில் வெள்ளம்புத்தூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

பிரேத பரிசோதனைக்குப்பின் 25ஆம் தேதி சமயன் உடல் அடக்கம் வெள்ளம்புத்தூரில் நடந்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் வே. ஏழுமலை, மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெயக்குமார் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புக்களின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ஆராயியின் மூத்த மகன்கள் மூவருக்கும் 25, 22, 19 வயதுதான். மற்றொரு மகள் அஞ்சலாட்சிக்கோ 17 வயதுதான். குடும்ப வறுமையால் இவர் திருப்பூரில் பனியன் கம்பெனியில் குறைந்த கூலிக்கு வேலை செய்கிறார். மகன்கள் 3 பேருமே வறுமைக்கு கல்வியை தீனியாக்கிவிட்டு பெங்களூரில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
26ஆம் தேதி தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வெள்ளம்புத்தூரில் சம்பவ இடத்தைப் பார்வையிட வரும்பொழுது உடன் வந்து கடமையை கச்சிதமாக நிறைவேற்றிவிட்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.

இந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற சம்பவம் இதே ஊரில் இதற்கு முன்பும் இரண்டுமுறை நடந்துள்ளன. காவல்துறை வழக்கம்போல் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து நடைபெறும் இந்த தாக்குதல்களால் பெண்களும், குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். காவல்துறை அலட்சியமாக இருப்பதாலும் நாட்கள் கடந்துகொண்டே இருப்பதாலும் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவாக ஊடகங்களில் பலரும் பலப்பல தகவல்களை பதிவு செய்துவருவது கவலையளிக்கிறது. ஆயினும் மாவட்ட காவல்துறையோ, மாவட்ட ஆட்சியரோ, மாநில முதல்வரோ இக்கொடிய சம்பவம் குறித்து தேவையான கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையானது.
திருக்கோயிலூருக்கு அருகருகே இப்படி தொடர்ச்சியாக மர்மமான தாக்குதல்களும், கொலைகளும் நிகழ்ந்தவண்ணம் உள்ளது வேதனை அளிக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் செங்கனாங்கொல்லை என்ற கிராமத்தைச் சேர்ந்த விசித்ரா என்ற +1 படிக்கும் தலித் மாணவி நாக்கைக்கடித்த நிலையில் உடலில் காயங்களுடன் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதை தற்கொலை என போலீசார் வழக்குப்பதிந்து உண்மையை மூடி மறைத்து விட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு வசந்தகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் படித்துவந்த மாணவன் கிருபாநிதி, +2 படித்து வந்த மாணவன் கோபி, 8ஆம் வகுப்பு படித்த வீரமணி ஆகிய 3 தலித் இளைஞர்களும் தலையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு இருவர் இறந்துவிட்டனர். கோபி இன்னமும் சுயநினைவு திரும்பாமல் சிகிச்சை பெற்று வருகின்றார். இது டிராக்டரின் பின்னால் மாட்டப்பட்டிருந்த ரொட்டவெட்டர் இடித்து ஏற்பட்ட வாகன விபத்து என உண்மையை ஆழக்குழி தோண்டி புதைத்துவிட்டது காவல்துறை.

இந்த சம்பவங்கள் அனைத்திலும் உரிய சாதாரண தடயங்களைக் கூட சேகரிக்காமல் செயல்பட்டுள்ள காவல்துறையின் நடவடிக்கைகள் இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம்புத்தூரில் இச்சம்பவம் நடந்து ஒருவாரம் கடந்த பிறகும் பாதிப்புக்குள்ளான ஆராயி குடும்பத்திற்கு நிவாரண உதவியோ, பாதுகாப்போ, ஆறுதலோகூட அரசாங்கமும் ஆட்சியாளர்களும் தெரிவிக்காதது வேதனையளிக்கிறது. மாவட்ட காவல்துறையின் அலட்சியமே இப்படி தொடர் கொலைகளும் குற்றங்களும் நடப்பதற்கு காரணம். இந்த மூன்று சம்பவங்களிலும் பாதிப்புக்குள்ளானவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள கேரளாவில் மனநிலை பாதிக்கப்பட்ட மது கொலைசெய்யப்பட்டதற்கு அம்மாநில இடதுமுன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்ததுடன் 24 மணி நேரத்தில் ரூ10 லட்சம் உதவித்தொகை அறிவித்துள்ளார். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் தமிழக முதல்வரின் நடவடிக்கை எப்படி உள்ளது என நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண்களின் பாதுகாப்பிற்கு என 13 அம்சத் திட்டத்தை அறிவித்தார். இதில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து 15 நாட்களுக்கு ஒருமுறை காவல்துறை இயக்குனருக்கு தெரிவிக்க வேண்டும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள்மீது குண்டர் சட்டம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமினில் வெளிவர முடியாதபடி சட்டத்திருத்தம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் மகளிர் நீதி மன்றம், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவில் தீர்ப்பு, பெண்கள் இன்னல் தடுப்புச்சட்டம் குறித்து பெண் காவலர்களுக்கு பயிற்சி, பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவு, மறுவாழ்வுப் பணிகளை மாநில அரசே செய்யும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணிநேர தொலைபேசி வசதி, அரசுக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவது, வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்களில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள்… என்பன போன்ற 13 அம்சத் திட்டங்கள் கிடப்பிலேயே உள்ளன. அம்மா வழி அரசு சும்மாவே உள்ளது.

உடனடியாக தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், தலித் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் குறித்து அவசரமாக கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்றுத்தர காவல்துறை உறுதியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.கொலையான சிறுவன் சமயன் குடும்பத்திற்கு ரூ 25லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆராயி, தனம் இருவருக்கும் தேவையான உயர் சிகிச்சை அளித்து அவர்களைப்பாதுகாக்க வேண்டும். அதற்கான செலவுகள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். திருக்கோயிலூர் பகுதிமுழுவதும் அச்சத்தில் உறைந்து போய் உள்ள பொதுமக்களின் அச்சத்தைப் போக்கிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரவு பகல் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: