ஈரோடு, பிப்.
பெருந்துறை பகுதியில் கிராவல் மண் கடத்தி விற்பனை செய்த அதிமுக பிரமுகர் இருவருக்கு ரூ.8 கோடி அபராதம் விதித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஆர்.எஸ்.கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சேனாபதி. அதிமுக பிரமுகரான இவர் பெருந்துறை நிலவள வங்கியின் தலைவராக இருந்து வருகிறார். இதேபோல் பெருந்துறை தோப்புபாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியம். இவரும் அதிமுக பிரமுகராவார். இவர்கள் பெருந்துறை அருகேயுள்ள கருமாண்டிசெல்லி பாளையம், சென்னிமலை, கொங்கம்பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். ஆகவே, விதிமுறைகளை மீறி செயல்பட்ட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2014 ஆம் ஆண்டு பெருந்துறை தாஷ்கண்ட் வீதியை சேர்ந்த சி.கே.நந்தகுமார் என்பவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக விசாரிக்க வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவிக்கு, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இவர்கள் சட்டவிரோதமாக மண் கடத்தியது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளங்கள் குறித்து அளவீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் சேனாபதி, சுப்ரமணியம் ஆகியோருக்கு ரூ.1 கோடியே 96 லட்சத்து 56 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்த சேனாபதி, சுப்ரமணியம் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு மனு அளித்தனர். இம்மனுவினை விசாரித்த ஆட்சியர், இருவரின் அபராத தொகையையும் ரத்து செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி நந்தகுமார் மீண்டும் ஒரு புகார் மனுவை ஆட்சியரிடம் வழங்கினார். இதில் அனுமதியின்றி மணல் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்பேரில் மீண்டும் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு வருவாய் கோட்டாட்சியருக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் புகார் கூறப்பட்ட சேனாபதி, சுப்ரமணியன் மற்றும் சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே இவ்வழக்கை காலதாமதமின்றி விரைந்து விசாரணை நடத்திட உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தகுமார் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, இம்மனு மீதான விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து கருமாண்டி செல்லிபாளையம், சென்னிமலை, கொங்கம்பாளையம் போன்ற பகுதிகளில் மறு ஆய்வு செய்யும் பணி கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் மற்றும் கனிம வனத்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மறு அளவீட்டுப் பணியின்போது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை நிபந்தனை பட்டா நிலங்களில் அனுமதியின்றி மண் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் கொங்கம்பாளையம், சென்னிமலை கிராமத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் கருமாண்டிசெல்லிபாளையத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 715 கன மீட்டரும், சென்னிமலையில் 1 லட்சத்து ஓராயிரத்து 208 கன மீட்டர், கொங்கம்பாளையத்தில் 13 ஆயிரத்து 293 கனமீட்டர் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதன்படி 3 கனமீட்டர் மண் ஒரு யூனிட் எனக் கணக்கிடப்பட்டதில் மொத்தம் 78 ஆயிரத்து 405 யூனிட் மண் அனுமதியின்றி வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.300 வீதம் அரசு நிர்ணய கட்டணமான சீனியரேஜ் தொகை ரூ,180 மற்றும் அபராத தொகை 3 மடங்கு என கணக்கீட்டின்படி மொத்தம் ரூ.7 கோடியே 99 லட்சத்து 73 ஆயிரத்து 100 அபராதமாக விதித்து வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவி உத்தரவிட்டார்.
இந்த அபராத தொகையில் ரூ.4.10 கோடி கருமாண்டி செல்லிபாளையத்தில் மண் அள்ளியதற்காகவும், சென்னிமலையில் மண் வெட்டி எடுத்ததற்காக ரூ.3.44 கோடியும், கெங்கம்பாளையத்தில் மண் எடுத்ததற்கு ரூ.45.19 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த தொகையை உடனடியாக வNRRசூலித்து அரசு கருவூலத்தில் சேர்க்க பெருந்துறை வட்டாட்சியர் வீரலட்சுமிக்கு வருவாய் கோட்டாட்சியர் நர்மதாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதுதொடர்பான ஆட்சேபணை இருந்தால் 30 நாட்களில் மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
————

Leave A Reply

%d bloggers like this: