புதுக்கோட்டை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பாஜக தேசிய, மாநிலத் தலைவர்கள் வெவ்வேறான கருத்துக்களைத் தெரிவித்து நாடகமாடுகின்றனர் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது:
காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென கடந்த 22 ஆம் தேதி தமிழக முதல்வர் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வலியுறுத்தினார். ஆனால் பிரதமர் மோடி இதுகுறித்து வாய்திறக்கவில்லை. அதே நேரத்தில் மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை எனக்கூறிவிட்டார். இரண்டு மாநிலங்களும் இரண்டு கண்களைப் போல எனப் பசப்புகிறார்.ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க இருப்பது போல சூசகமான வார்த்தைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முன்வர வேண்டும். மத்திய அரசின் எடுபிடியாக செயல்பட்டு வரும் எடப்பாடி அரசு இதைச் செய்ய
முன்வரும் என்று சொல்லமுடியாது. எனவே எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய இயக்கங்கள் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி மிகப்பெரிய இயக்கத்தை நடத்துவதற்கு முன்வர வேண்டும்.

சென்னைக்கு வந்த மோடி சமஸ்கிருதத்தை விட மூத்தமொழி என தமிழை புகழ்ந்துவிட்டதாக இங்குள்ள பாஜகவினர் பெருமை பேசுகின்றனர். இப்படி வெற்றுப் பெருமை பேசிக்கொண்டே சென்னை ஐஐடி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்து சமஸ்கிருத
பக்திப்பாடலை பாட வைக்கின்றனர். நாட்டில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் மிக வேகமாக திணிக்க முயலும் இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியது. வட மாநிலங்களில் இந்தி தெரியாத தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்கள் கொடுமையான முறையில் அவமானப்படுத்தப்படுகின்றனர். இதனால் பல இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். மொழியின் காரணமாக நடைபெறும் கொலை, தற்கொலைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் சமீப காலங்களில் தலித் குடும்பங்கள் மீது கொலை வெறித் தாக்குதல்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை காவல்துறை திசைதிருப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையிலான குழு அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தவுள்ளது. ஆந்திராவில் ஆதிவாசி மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது 60 தமிழர்களை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் 5 பேரின் சடலங்களை ஆந்திர மாநில போலீசாரே கொண்டுவந்து அடக்கம் செய்துவிட்டுப் போய் இருக்கிறார்கள். உறவினர்களின் அனுமதியில்லாமலே அவர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டுக் காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பல் மீது எடுத்த நடவடிக்கை என்ன? செம்மரக் கட்டைகள் கடத்தப்படும் துறைமுகங்களில் சோதனை நடத்தி தடுக்க முடியாதா? அவர்களை தப்பிக்கவிட்டு அப்பாவி மக்களை குருவி சுடுவது மாதிரி கொன்று குவிப்பது என்ன நியாயம்?
காஞ்சிபுரம் உத்திரமேரூர் பகுதியில் கருணை இல்லம் என்ற பெயரில் செயல்படும் தொண்டு நிறுவனத்தில் மர்மமான இறப்புகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாட்டில் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தலைநகருக்குப் பக்கத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறதென்றால் புலனாய்வுத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். பேட்டியின் போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: