கோவை, பிப். 26-
காரமடை வெண்மணி நகரில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பொதுவழியை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி தலித் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியின் சார்பில் தலித் இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதன் பின்னர் கோரிக்கையை வலியு
றுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில்ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறுகையில், கோவை மாவட்டம் காரமடை அருகே நால்ரோடு பகுதியில் வெண்மணி நகர் உள்ளது. இங்கு 96 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறோம். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போதுதான் எங்கள் வீடுகளுக்கு பட்டா கிடைத்துள்ளது. இங்கு கழிப்பிடம், சாலை, மற்றும் மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. மேலும், எங்கள் குடியிருப்பை சுற்றி கம்பி வேலிகள் போட்டுள்ளதால் காலியாக உள்ள முன்பக்கம் மட்டும் வழித்தடமாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் பெரும் சிரமத்திற்கிடையே எங்கள் குடியிருப்பிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நகரத்திற்கு சென்று படித்து வருகிறோம்.

தற்போது நாங்கள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் இடமும் தனியார் ஒருவருக்கு சொந்தம் என்று அவ்வழியை அடைக்க முயற்சிக்கிறார்கள். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தால் பொதுவழித்தடம் ஆக்கிரமிப்பில் உள்ளதால்தான் அடிப்படை வசதிகள் செய்து தரமுடியவில்லை என கூறுகின்றனர்.அடிப்படை வசதியும் இல்லை, வழித்தடமும் இல்லாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். ஆகவே, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடமிருந்து பொது வழியை மீட்டுத்தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மேட்டுப்பாளையம் வாட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.