பிறந்தநாளா… நினைவு நாளா?
அரியலூர்:
ஜெயலலிதாவின் 70 வது பிறந்த நாள் விழா அன்று அரியலூர் அதிமுகவினர் போட்டி போட்டுக்கொண்டு அவரவர் ப்ளக்ஸ் போர்டுகளை வைத்து அசத்தினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா என்று ப்ளக்ஸ் பேனரை வைக்காமல், முதலாம் ஆண்டு நினைவு தினம் என்று வைத்து மாலை அணிவித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் கொடுத்துள்ளனர்.
‘நாய்களை விட்டு கடிக்கவிடுறாக’
கரூர்: 
’நாங்க பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவங்க. பொதுப்பாதையில் பள்ளிக்கூடத்துக்கு போனா, இந்த வழியா வரக்கூடாதுன்னு சொல்லி சாதி ஆதிக்க சக்திகள் சேர்ந்தவர்கள் நாய்களை விட்டு கடிக்க வைக்கிறாங்க’ என்று என்று வேதனை தெரிவிக்கிறார்கள் கரூர் ஆண்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் கரூர் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்துள்ளனர்.
அலட்சியம் இல்லை
சென்னை:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, `ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டதில் அலட்சியம் ஏதுமில்லை. அந்தச் சிலையில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்படும். இரட்டை இலையையும் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க என்ற இயக்கத்தையும் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது’ என்றார்.
மலேசியாவில் ஸ்டாலின் பெருமிதம்…!
கோலாம்பூர்
மலேசிய சென்றுள்ள தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசியுள்ளார். அந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் ‘மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் இந்தியர்களும் – குறிப்பாக தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியது’ என்றார்.
ரயில் விபத்தில் 6 பேர் பலி
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தின் சாதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
மாயமான காஷ்மீர் மாணவர்
புவனேஸ்வரம்:
தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றுவந்த ஜம்மு-காஷ்மீர் மாநில மருத்துவ மாணவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரைக் கடந்த 9-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
1,304 ஆமை முட்டைகள்
தனுஷ்கோடி:
இராமேஸ்வரமும் தனுஷ்கோடியும் ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்கு விருப்பமான இடங்கள் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகளின் முட்டையிடும் சீசன் நடைபெறும். ஞாயிறன்று ஒரு நாளில் மட்டும் 1,304 ஆலிவ் ரிட்லி ஆமை முட்டைகளைச் சேகரித்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள்.
மருத்துவமனையில் பாரிக்கர்
பனாஜி:
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வயிற்றுவலி காரணமாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், நீர் வறட்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காவிரி நீர் கிடைக்காது : சு.சுவாமி
தமிழர்களுக்கு தண்ணீர் வேண்டுமா, காவிரி தண்ணீர் வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, தண்ணீர் வேண்டுமானால் அரசுக்கு மாற்று வழிகள் குறித்து யோசனை வழங்கத் தயார் என்றும் காவிரி தண்ணீர்தான் வேண்டுமென்றால், அது கிடைக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
‘தயாராக இருங்கள்’…!
மதுரை:
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. தமிமூன் அன்சாரி, `மத்திய பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றது. ராஐஸ்தான், மேற்குவங்கத்தில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமிழகத்தில் நோட்டாவுடன் போட்டி போட தயாரக இருக்கவேண்டும். பாரதிய ஜனதா மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்’ என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.