சென்னை:
துபாயில் உயிரிழந்த, திரைக்கலைஞர் ஸ்ரீதேவியின் உடற்கூராய்வு அறிக்கையும் தடயவியல் அறிக்கையும் வெளியாகியுள்ளது.

அதில், ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என்றும், அவரது மரணத்தில் சதிச்செயல் எதுவும் இல்லை என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும், தமிழ்த் திரையுலகம் மட்டுமன்றி பாலிவுட் திரையுலகிலும் கோலாச்சியவருமான ஸ்ரீதேவி (55), தனது உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்றிருந்தார். அங்குள்ள சுபைரா எமிரேட் டவர்ஸ் ஹோட்டலில் தனது கணவர் போனி கபூருடன் தங்கியிருந்தார். இந்நிலையில், சனிக்கிழமையன்று இரவு அவர் திடீரென இறந்தார். அவரது மரணம் தொடர்பான முதற்கட்ட தகவல்கள், ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவே கூறின. எனினும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. ஸ்ரீதேவியிடன் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்த நிலையில், உடற்கூராய்வுக்கு பின்னரே ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்க முடியும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நிர்வாகம் தெரிவித்து விட்டது.

அதைத் தொடர்ந்து, உடற்கூராய்வு மட்டுமன்றி, தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டு தற்போது ஸ்ரீதேவியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் உடற்கூராய்வு மற்றும் தடயவியல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஸ்ரீதேவியின் மரணம் ‘நீரில் மூழ்கிய விபத்தால் ஏற்பட்ட மரணம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஸ்ரீதேவியின் ரத்த மாதிரியை சோதனை செய்ததில், அதில் ஆல்கஹால் கலந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. விபத்தின் காரணமாகத்தான் ஸ்ரீதேவி உயிரிழந்திருக்கிறார்; இதில் சதிச்செயல் எதுவும் இல்லை என்று துபாய் போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீதேவியின் உடற்கூராய்வு அறிக்கையை, அவரது குடும்பத்தினரிடமும் மற்றும் இந்திய அதிகாரிகளிடமும், துபாய் அரசு வழங்கியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: