கோவை, பிப்.26-
ஆசிரியர்கள் இல்லாததால் கல்வி பாதிப்பதால், உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என வகுப்புகளை புறக்கணித்து கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் அரசு பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

இகுறித்து, கோவை நஞ்சப்பா ரோடு, அனுப்பர்பாளையத்தில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திங்களன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு தங்களது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் உட்பட 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை. தமிழ் ஆசிரியரே, அறிவியல் பாடத்தையும் எடுத்து வருகிறார். கடந்த ஜீலை மாதம் முதல் அறிவியல் மற்றும் கணிதப்பாடத்திற்கு ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே, கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திற்கு புதிய ஆசிரியரை நியமிக்கக்கோரி மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலரிடம் கடந்த (பிப்.15) தேதி மனு அளித்தோம். ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து முதன்மை கல்வி அலுவலரிடம் மீண்டும் முறையிட்டபோது, பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற இருப்பதால் தற்போதைக்கு ஆசிரியர்களை பணியமர்த்த முடியாது என மறுத்துவிட்டார். இதனால் எங்களது கல்வி பாதிக்கப்படுகிறது.

ஆகவே, மாணவர்களின் கல்விநலன் கருதி காலியிடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: