கல்பனா……..இப்ப நீ கிழி , கிழி, கிழினு கிழிச்சிட்டே…” என்றவாறு கைக்கொட்டிக்கொண்டே வந்தாள் தொகுப்பாளினி.
கல்பனா தனது ஆடைகளை வேகமாக கவனித்தாள். நல்ல வேளை கிழியாமலிருந்தன.
நடுவர்களில் ஒருவர் “ கல்பனா……..”
“ எஸ் மேம்?“
“உனக்கு இவ்ளோ எனர்ஜி எங்கேயிருந்து கிடைச்சது”
“ஆடியன்ஸ் கைத்தட்டலும், உங்க பாராட்டுதலும்தான் மேம்”
“ கிழிச்சிட்டே”
கல்பனாவிற்கு மீண்டும் தலை சுற்றியது. “கிழிச்சிட்டே ” என்பது பாராட்டுச்சொல்லா, இல்லை தனது கிராமத்தில் சொல்வதைப்போல ஏசலா என அவளால் அனுமானிக்க முடியவில்லை.
“கல்பனா….உன்னுடைய ட்ரெஸ் ரொம்ப கியூட்டாக இருக்கு “
“ தேங்க்யூ மேம்”
“ யார் செலக்சன் ?”
“யார் செலக்சனும் கிடையாது மேம். பக்கத்து வீட்டுல ஒரு பாப்பா பிப்த் படிக்கிறா. அவளுடைய ட்ரெஸ் மேம். உங்க ட்ரெஸ்ஸீம் சூப்பர் மேம்”
“ தேங்க்யூடா . தேங்க்யூ”
“ உங்க மகளுடையதா மேம்?”
“ நோ, நோ. நான் சிக்ஸ்த் படிக்கிறப்ப எடுத்தது”
அரங்கத்தில் கைத்தட்டல், விசில் என ஆக்ரோஷமாய் எழுந்தன.
“கல்பனா நிகழ்ச்சிக்கு வருவோம். நீ என்ன படிக்கிறே?”
“லெவன்த். மேத்ஸ் குரூப் மேம் “
“ டென்த்ல எவ்ளோ மார்க்?“
“ அதெல்லாம் வேண்டாம் மேம்“
“ பரவாயில்ல சொல்லு“
“டு நாட் பைவ் மேம்”
“ கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கே?”
“ எஸ் மேம்“
“ எந்த ஸ்கூல்?”
“ கவர்மென்ட் கேல்ஸ் ஹயர் செகன்ட்டரி ஸ்கூல் மேம்”
“மார்க் போதுமா?“
“ போதும் மேம்”
“ எப்படி போதுமுனு சொல்றே?”
“அதிக மார்க் எடுத்தால் அடுத்தவங்களுக்கு கீழ் வேலை பாரக்கணும். ஜஸ்ட் பாஸ்னா பத்து பேருக்கு வேலைக் கொடுக்கலாம் மேம்”
“ வெரி குட் கல்பனா. எப்படி சொல்றே?”
“ நீங்க இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்துக்கிட்டு இருக்கிறீங்கனா அதுக்கு காரணம் உங்க படிப்பு இல்லைங்களே மேம்”
“ குட் கல்பனா. தமிழ் சினிமா டயலாக் மாதிரி கியூட்டா பேசுறே . தமிழ் பிலிம்ஸ் ரொம்ப விரும்பி பார்ப்பியோ?”
“ எஸ் மேம்“
“ எது மாதிரி படங்கள் விரும்பி பார்ப்ப”
“ `ஹிட் டான்ஸ் படங்களா விரும்பி பார்ப்பேன் மேம்”
“உனக்கு யார், யார் டான்ஸ் ரொம்ப பிடிக்கும்?”
“பிரபு தேவா, லாரன்ஸ், ரித்திக் ரோசன், சிம்பு, விஜய்”
“ உனக்கு பிடித்த `ஹீரோயின்?”
“ கரினா கபூர், பிரியங்கா சோப்ரா”
“ தமிழ்ல ?”
“சிம்ரன், ஜோதிகா மேம்”
“ ஏன் அவங்கள பிடிக்குது…..?”
“அவங்க டான்ஸ் ஆடுறப்போ பாடி மூவ்மென்ட் நல்லாயிருக்கும் மேம்”
“ உனக்கு பிடிச்ச பாட்டு?“
“ மன்மத ராசா”
“ பழைய பாட்டுல?”
“ சித்தாடை கட்டிக்கிட்டு…. ”
“ வண்ணக்கிளி படப் பாட்டு?“
“ எஸ் மேம்”
“ அந்த பாட்டு உனக்கு தெரியுமா?“
“ கொஞ்சம் தெரியும் மேம்“
“ பாடிக்காட்டு பார்க்கலாம்”
“ வேண்டாமுனு நினைக்கிறேன் மேம்”
“பரவாயில்ல பாடு. சப்போஸ் உன் வாய்ஸ் நல்லாயிருந்தால் சாங்க்ஸ் புரோக்கிராம்லயும் சேர்ந்துக்கிறலாம் ”
“ ஆடியன்ஸ் விரும்பிக் கேட்குறாங்க அவங்களுக்காக பாடுறேன் மேம். சித்தாடைக்கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு , மத்தாப்பு சுந்தரியொருத்தி மயிலாக வந்தாளாம். அத்தானைப்பார்த்து அசந்து போயி நின்னாளாம்…”
“வெரிகுட் கல்பனா. உன் வாய்ஸ்ஸ விட டான்ஸ் ஸ்டெப் சூப்பர் ”
“தேங்க்யூ மேம்”
“ உன்னுடைய கோச் யார்?“
“ சிந்துஜா ”
“ அவங்கதான் உன் டான்ஸ் மாஸ்டரா?“
“ அதெல்லாம் கிடையாது மேம். அவள் என் ஓன் எல்டர் சிஸ்டர்”
“ வாவ். வெரிகுட். வெரிகுட்”
“அவள்தான் உனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாளா?”
“இல்ல மேம். அவள் ஆடியதை பார்த்து நான் ஆடிக்கிட்டிருக்கேன் மேம்“
“ நல்ல ஆடுவாளா?“
“ எந்த பாட்டுக்கு ஆடினாலும் அதே மாதிரி ட்ரெஸ் உடுத்திக்கிட்டுதான் ஆடுவாள்”
“ நிறைய ட்ரெஸ் வச்சிருப்பாளோ?”
“கிடையாது மேம். என் ட்ரெஸ் , அம்மா , அப்பா , அண்ணன் எல்லார் ட்ரெஸ்சும் அவள் ட்ரெஸ்தான்”
“ நல்லா படிப்பாளா?”
“ டென்த்ல ஃபோர் எய்ட்டி வைவ். ஸ்கூல் ஃபஸ்ட்”
“ டுவல்த்ல?”
“ தவ்ஸன்ட் அன்ட் ஹன்ட்ரட்”
“ பி.இ , எம்.பி.பி.எஸ் கிடைச்சிருக்குமே”
“ டுவல்த்ல ஆர்ட்ஸ் குரூப்”
“ டென்த்ல அவ்ளோ மார்க் எடுத்திட்டு டுவலத்ல ஏன் ஆர்ட்ஸ் எடுக்கணும்…..?”
“கலெக்டர் ஆகணுமுனா காமர்ஸ் எடுத்து படிக்கிறதுதான் ஈசினு சொல்லிட்டாள்”
“ ம். பிறகு……?’’
“ அவளுடைய கவனம் டான்ஸ் பக்கம் திரும்பிருச்சி”
“ வாவ்!”
“எஸ் மேம். உங்க நிகழ்ச்சிகளையே விரும்பிப் பார்த்தாள். எங்க அப்பாவுக்கு அவள் நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்கல மேம். அவருக்கு அவள் பூமியை குலுக்கும் மூதேவி”
“ அம்மாவுக்கு?”
“ பத்ரகாளி”
“ அவளுக்கு?”
“ டான்ஸ்தான் பிரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாம்”
“ நைஸ். கேட்கவே நல்லாருக்கு”
“ சிந்துஜா வந்திருக்கிறாங்களா?”
“ வரலை மேம்”
“ ஏன்?“
“வரமுடியாது மேம்”
“ ஏன்?”
“ அவள் இறந்திட்டாள் மேம்”
“ ஓ காட்! என்ன சொல்றே கல்பனா?”
“ எஸ் மேம்”
“ எப்ப இறந்தாள்?”
“ இரண்டு வருசத்து முன்னாடி மேம்”
“ எப்படி?”
“ சூசைடு பண்ணிக்கிட்டாள்”
“ எதனாலே?!”
“அவளுடைய டான்ஸே அவளை கொன்னுடுச்சு மேம்”
“ எப்படி?”
“ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் படிச்சிக்கிட்டிருந்தாள். காலேஜ்ல கல்ச்சுரல் புரோக்கிராம்னா அவளுடைய டான்ஸ் இல்லாமல் இருக்காது. காலேஜில் ஆடி கைத்தட்டு வாங்கியவள் அதைத் தாண்டி போக ஆசைப்பட்டாள் மேம்.”
“ எப்படி?”
“ அவ பிரன்ஸ்களோடு சேர்ந்து கல்லூரி கலக்கல்னு ஒரு குரூப்ப ப்பார்ம் பண்ணிட்டாள்”
“ பிறகு…?”
“ பக்கத்து டவுன் கோயில் திருவிழாவுக்கு டான்ஸ் புரோக்கிராம் பண்ணப்போனாள். புரோக்கிராம் முடிஞ்சதும்……”
“ முடிஞ்சதும்?”
“ ரவுடிங்க மேடையில் ஏறி அக்காவைத் தூக்கிட்டாங்க“
கொஞ்ச நேரம் அரங்கத்தில் நிசப்தம் நிலவியது.
“ போலீஸ் ?”
“அவங்களால வேடிக்கை பார்க்கத்தான் முடிஞ்சது.“
“ பிறகு ?”
“வீட்டுக்கு வந்ததும் அப்பா முகத்துல முழிக்க சங்கடப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாள் மேம்”
“கல்பனா……..அவளுடைய கனவு என்னவாக இருந்தது?“
“உங்க நிகழ்ச்சியில டான்ஸ் ஆடி உலகளவில் பிரபலமாகணுமுனு நினைச்சிருந்தாள் மேம்”
“ உன்னுடைய கனவு?”
“ அவளுடைய கனவை நிறைவேற்றணும் மேம்”
“ குட் கல்பனா”
“ தேங்க் யூ மேம்”
“ குட். குட். இப்ப பைனல்ல நீ பண்ணுன பெர்ஃபாமன்ஸ் பற்றி எப்படி ஃபீல் பண்றே?”
“ நல்லா பண்ணிருக்கேன் மேம்“
“ நல்லானா?“
“ஃபஸ்ட் பிரைஸ் வாங்குமளவிற்கு மேம்”
“ சப்போஸ் ஃபஸ்ட் வராமல் போனால்?“
“ ஸ்யூரா வருவேன் மேம்”
“ சப்போஸ் வராமல் போனால்?”
“ வாய்ப்பே இல்ல மேம். கண்டிப்பா வின் பண்ணுவேன்”
“மூனு ஜட்ஸ்களும் ஒரே மாதிரி மார்க் கொடுத்திருக்கணுமே”
“ எஸ் மேம்”
“ கொடுத்திருப்பாங்களா?”
“ கொடுத்திருப்பாங்க மேம்”
“ இந்தக் கன்டஸ்ட்ல வின் பண்ணினால் ப்ரைஸ் எவ்வளவு தெரியுமா?”
“ தெரியும் மேம்”
“ எவ்வளவு?”
“ பத்து லட்சம் மேம்”
“ பத்து லட்சத்துக்கு எத்தனை ஜீரோ டக்குனு சொல்லு பார்க்கலாம்”
“ சிக்ஸ் ஜீரோஸ் மேம்“
“ வாவ்! குட்“
“ தேங்க்யூ மேம்“
“ பஸ்ட் பிரைஸ் யாருனு தெரியுமா?”
“ யாரு மேம்?”
“ யாராக இருக்கும்?”
“ நானாகத்தான் மேம் இருக்கும்”
“ நீ தான் ”
அரங்கத்தில் கைத்தட்டலும் விசில் சத்தமும் எழுந்து , அடங்க நீண்ட நேரம் பிடித்தது. சாக்லெட்டுகள் குவியலாக அவள் மீது கொட்டிக்கொண்டிருந்தன.
“ கல்பனா”
“ எஸ் மேம்”
“ இந்த நேரம் உனக்கு இப்ப எப்படி இருக்கு?”
“ சொர்க்கத்தில என் அக்கா கூட இருக்கிற மாதிரி இருக்கு மேம்”
“ அப்படிதான் உன் முகமும் காட்டுது”
“ எஸ் மேம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கேன் ”
“ கல்பனா………அடுத்து ஒரு முக்கியமான கேள்வி.”
“ கேளுங்க மேம்”
“ இந்த பத்து லட்சத்தை என்ன செய்யப்போறே?“
“ உங்களுக்கிட்டயே கொடுக்கலாமென இருக்கேன் மேம்.”
“ அப்படியா?”
“ எஸ் மேம்”
“ ஏன்?”
“ அவ்ளோ பணத்தையும் நீங்களே வச்சிக்கிருங்க மேம். வச்சிக்கிட்டு, எங்கள கவர்ச்சிப்பொருளா சித்தரிக்காம மான மரியாதையோட கொஞ்சம் வாழ விடுங்க மேம். ப்ளீஸ் மேம்….. ”

Leave a Reply

You must be logged in to post a comment.