படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்தால்தான் அந்தப் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோர முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:நான் ஐந்தாண்டு சட்டப்படிப்பை சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முடித்துள்ளேன்.படிப்பின்போது முதல் ஆண்டை ஆங்கில வழியிலும், அடுத்த நான்கு ஆண்டுகளை தமிழ் வழியிலும் படித்தேன். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டேன்.
இதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் போது, தமிழ் வழியில் படித்துள்ளேன் என்று தவறான தகவல் அளித்துள்ளதாக கூறி எனது விண்ணப்பத்தை டிஎன்பிஎஸ்சி நிராகரித்தது.
எனவே எனக்கு தாழ்த்தப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கி நேர்முகத் தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் .இவ்வாறு அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி. ராஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ் சரிபார்ப்பின் போது தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க முடியவில்லை, எனவே மற்ற இரண்டு பிரிவுகளின் கீழ் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்தால் மட்டுமே அந்தப் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்றும், சான்றிதழ் சரிபார்ப்பின் போது உரிய சான்றிதழ் சமர்ப்பிக்காத காரணத்தால்தான் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, படிப்பு முழுவதையும் தமிழ் வழியில் படித்தால் மட்டும் அந்தப் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் மனுதாரர் உரிய சான்றிதழ் சமர்ப்பிக்காத காரணத்தால் தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு பெற முடியாது என்றும் தெரிவித்தார். எனவே மற்ற இரண்டு பிரிவின் கீழ் மனுதாரருக்கு இடஒதுக்கீடு வழங்கி நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.