சென்னை, பிப். 25-
‘மயிலுக்கு மரணமில்லை’ என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: இந்தியசினிமாவின் மகத்தான திரைக்கலைஞர் ஸ்ரீதேவியின் மரணம் திரையுலகையும் அவரது ரசிகர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழகத்தின் சிவகாசியை அடுத்த மீனம்பட்டி எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஸ்ரீதேவி. சிறுவயதில் சிவகாசி அருகே தன் தாயுடன் வசித்துவந்தவர். குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக குழந்தையாக இருந்தபோதே நடிப்புத்துறைக்கு வந்தவர். முருகன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். நீண்ட நாட்களுக்குப்பிறகு பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் கதாநாயகியாக மீண்டும் தமிழ்ச்சினிமாவுக்குள் வந்தார். அப்படத்தில் அவர்ஏற்று நடித்த மயிலு எனும் கதாபாத்திரத்தின் மூலம் அனை வரையும் ஈர்த்தவர். அந்த மயிலு என்ற பெயராலேயே காலம் முழு வதும் கொண்டாடப்பட்டவர்.

அப்படத்தின் தொடர்ச்சியாக ஜானி, மூன்றாம்பிறை போன்ற படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ்த்திரையுலகில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தார். கமலஹாசன், ரஜினிகாந்த், சிவாஜிகணேசன் உள்ளிட்ட முக்கியக்கலைஞர்களுடன் இணைந்து நடித்தபோதும், தனது தனித்துவமான நடிப்பு முறையினால் அப்படங்களிலும் கூட தனித்து தன் திறமையை நிரூபித்தவர்.பின்னர் இந்தி சினிமாவில் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, அங்கும் தனது தனித்த நடிப் பின்மூலம் பாலிவுட்டின் கதாநாயகியாக உயர்ந்தார்.மலை யாளம், கன்னடம்,தெலுங்கு சினி மாக்களிலும் முத்திரைபதித்தவர்.இந்நிலையில் துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, அங்கு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.அவருக்கு வயது 54.அவரது மறைவு இந்திய திரை யுலகுக்கு ஈடு செய்யவியலாத இழப்பாகும்.அவரது மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

தமிழகத்தில் பிறந்து குழந்தைப் பருவம் முதல் தமிழ் திரையுலகில் நடித்து, படிப்படியாக உயர்ந்து பல இந்திய மொழிகளில் சிறந்த நடிகையாக நடிப்புத்துறையில் பல சாதனைகளை படைத்து வந்த ஸ்ரீதேவி அவர்களின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.அவரது மறைவு திரை உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.அவரது மறைவால் துயருற்று இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திரை உலகத்தினருக்கும் , அவரது ரசிகப் பெருமக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Leave a Reply

You must be logged in to post a comment.