இந்த 64 பக்க நூல் தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் வெளியிடப்பட்டது.பொதுவுடமை இயக்கத்தின் முக்கியத் தலைவரும், மாதர் இயக்கத்தின் முன்னோடித் தலைவருமான மைதிலி சிவராமனின் மகள் இந்நூலை எழுதியுள்ளார்.
மைதிலியின் கல்லூரித் தோழியான டாக்டர் வசந்திதேவியின் முன்னுரை அருமை.மைதிலி, அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக் கழகத்தில் பொது நிர்வாகக் கல்வியில் முதுநிலை பட்டம் பெற்றவர். நியூயார்க் மாநில அரசின் நிதித்துறையிலும் பின்னர் ஐ.நா சபையில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியவர். மேலை நாட்டு உயர்கல்வி, மேல்தட்டு பதவிகள் ஆகிய பின்புலத்தில் வந்தவர் உழைப்பாளி மக்கள், மாதர் விடுதலைக்கான பொது வாழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
சொந்த நலனைப் பின்னுக்குத் தள்ளி பொது நலனை முன்னிறுத்திய அரிய பண்பு அது.1968 ல் இந்தியா திரும்பிய மைதிலியை தஞ்சை கீழ் வெண்மணியில் நிகழ்ந்த 44 விவசாயத் தொழிலாளிகள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடூரம் அவரின் பொது வாழ்க்கை நோக்கிய ஈர்ப்புக்கான நெருப்பாக அமைந்தது. அவர் அப்போது வெண்மணிக்கு சென்று அங்கிருந்த மக்களுடன் உரையாடிய அரிய புகைப்படமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. அதன் பின் தொழிற் சங்கம், மாதர் இயக்கத்தின் பெரும் தலைவராக அவர் வளர்ந்ததும், செயல் ஆற்றியதும் இந் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.மைதிலி மகள் கல்பனா அம்மாவின் அரவணைப்பை பல நேரங்களில் பெறாமல் போனவர்.
ஆனாலும் அம்மாவின் பொது வாழ்வு பற்றிய ஈர்ப்பும், மதிப்பும் தன்னுடைய “ தாயின் கவனம் இல்லாமல் வாடும் குழந்தை” என்கிற இழப்பை எவ்வாறு ஈடுகட்டியது என்பதை அழகாக, எளிமையாக வர்ணித்துள்ளார்.“ நான் ஒரு ஆணாக இருந்து இந்த வேலைகளைச் செய்திருந்தால் யாருக்கும் என் மீது கோபம் இருக்காது. பெண் மீதுதான் இவ்வளவு எதிர்பார்ப்புகள்” என்கிற மைதிலி வார்த்தைகள் பொது வாழ்வுக்கு வரும் பெண்கள் குடும்ப உறவுகளிடம் எதிர்கொள்கிற விமர்சனங்களை சுட்டுகிறது.வளர் பருவத்தில், சமூகத்தில் கலப்பதற்கும், திருமண முடிவிலும் எவ்வாறு தன்னை சுதந்திரமாக அம்மா அனுமதித்தார் என்ற கல்பனாவின் பகிர்வு எல்லா பெற்றோருக்குமான நல்ல அனுபவம்.“என் பெற்றோரைப் பார்த்து நான் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் ஒரு பெண் பொது வாழ்வில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக இருக்க முடியும் என்பதும், அவளை வியந்து பாராட்டியே ஒரு ஆண் எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உறுதுணையாக நின்று அவளைப் போற்றி வாழ முடியும் என்பதுமாகும்” என்று தனது பெற்றோர் மைதிலி – கருணாகரன் பற்றிய கல்பனா வெளிப்படுத்தும் பெருமிதம் குடும்ப ஜனநாயகத்தை நமக்கு உணர்த்துகிறது.
மைதிலியின் அறிவார்ந்த பங்களிப்பு, அதற்கான அவரது தயாரிப்பு, ஆழமான வாசிப்பு இதுவெல்லாம் எதிர்காலத் தலைமுறைக்கான பகிர்வுகள் ஆகும்.மைதிலி இன்று அல்சைமர் நோயால் துன்புறுவது பற்றிய குறிப்புகள் மனதை மிகவும் பாதிக்கிறது. “ வார்த்தைகள் என்னை விட்டு போகின்றன” என்று பதிவாகியுள்ள நோயின் தீவிரம் குறித்த மைதிலியின் வார்த்தைகள் மனதை உருக்குகிறது.கல்பனா! காம்ரேட் மைதிலி எங்களுக்கும் அம்மாதானே!மாபெரும் ஆளுமையின் மகத்தான வாழ்க்கை வித்தியாசமான முறையில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.