புதுச்சேரி, பிப். 25-
புதுச்சேரி அருகிலுள்ள ஆரோவில் பொன்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புதுச்சேரி விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். பிரதமரை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி தலைமையில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர். பாலன், தனவேலு, தீப்பாய்ந்தான், விஜயவேணி, திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவா, கீதா, ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். என். ஆர். காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி தலைமையில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதில் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ. ஜெயபால், அசோக் ஆனந்தன், திருமுருகன், சுகுமாறன், கோபிகா, சந்திர பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் அக் கட்சியின் எம்எல்ஏக்கள் எம்.பி.கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் மோடியை வரவேற்றனர். லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரில் பாஜகவினர் அமைத்திருந்த பொதுக்கூட்ட மேடைக்கு பிற்பகல் 2 மணிக்கு பிரதமர்மோடி வந்தார். அவரது பேச்சை கேட்பதற்கு கூட்டமே இல்லை. இதனால் பதறிப்போன புதுவை பாஜக நிர்வாகிகள், மைக்கை பிடித்து கூவிக் கூவி அழைத்தனர். அப்போதும் கூட்டம் சேரவில்லை. தமிழக தலைவர் தமிழிசையிடம் துண்டு சீட்டு கொடுத்தனர். அவரும், பொதுக்கூட்ட அரங்கிற்கு அனைவரும் உடனே வரவேண்டும் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஒருவரும் வரவில்லை. பொறுமையிழந்த பாஜக தலைவர்கள், காவல்துறையினரின் கெடுபிடியால் தான் மக்கள் பங்கேற்றவில்லை என்று குற்றம்சாட்டினர்.

பிறகு, காலி மைதானத்தை பார்த்துப் பேசிய மோடி மாநில அரசை கடுமையாக சாடினார். மேலும் கடந்த 48 வருடங்களில் காங்கிரஸ் கட்சி செய்யாத சாதனைகளை நாங்கள் 48 மாதங்களிலேயே செய்து காட்டுவோம் என்றும் பாஜக ஆட்சியை புதுச்சேரியில் நிறுவ வேண்டும் என்று பாஜகவினரைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.