கீழடி, ஆதிச்சநல்லூர் போன்று பல புதிய தொல்லியல் இடங்கள் பல தனிப்பட்ட ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் ஒரு நாள் செய்தியாக வந்துவிட்டு கண்டு கொள்ளாமல் நின்று விடுகின்றன. முறைப்படியாக அவ்விடங்கள் பாதுகாக்கப்படுவதற்குத் தொல்லியல் துறை எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. போதிய நிதியின்மையும் ஆட்கள் பற்றாக் குறையும் இதற்குக் காரணமாக கூறப்பட்டாலும் அரசுக்கு அதன் மீது போதிய அக்கறை இல்லை என்பதே உண்மை. மேலை நாடுகளில் தொல்லியல் குறித்த படிப்பையும் அதற்கு அரசு ஒதுக்கும் நிதியையும் கணக்கிட்டால் அதில் நாம் சில சதவிகிதங்களைக் கூட ஒதுக்கவில்லை என்பது புலனாகும். மேலும் தொல்லியல் உபகரணங்களும் நமக்கு நவீனமாக இல்லை. பழைய படிப்பாகவே நமது தொல்லியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நவீன தொல்லியல் பாடங்கள் இன்னும் நம்மிடம் உருவாக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் பல தொல்லியல் இடங்கள் புதிது புதிதாக தனிஆய்வாளர்களின் தேடல்களால் கண்டறியப்பட்டு வெளியிடப்படுகின்றன. அவ்விடங்கள் குறித்த சிறு பதிவை நாம் இங்கு காணலாம். (பத்திரிகைச் செய்திகள், முகநூல் பதிவுகள், ஆவணம் இதழில் இடம் பெற்ற பதிவுகள் சிலவே இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.)சென்னையிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் தொல்லியல் துறைஆய்வு செய்ததில் கற்கருவிகள், மட்பாண்டங்கள்பல கிடைத்துள்ளன. பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆய்வில் 200 க்கும்மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கி.மு. 3 முதல் கி.மு. 1 வரையிலான காலகட்டத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோமானிய மட்பாண்ட வகையான ரௌலட் மட்பாண்ட ஓடுகள், 23 உறைகளைக் கொண்ட கிணறு ஆகியவையும் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. செம்புப் பொருட்கள், கல்மணிகள், யானைத் தந்தத்தால் செய்த ஆபரணம், தமிழி (பிராமி) எழுத்துள்ள பானையோடுகள், கூம்பு வடிவ ஜாடிகளும் கிடைத்துள்ளன. இருபக்க முனையுடைய அரிதான கத்தி இங்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். இதுவரை கடலோரப் பகுதிகளில் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்துள்ள நிலையில் இப்போது மக்கள் வாழ்விடப் பகுதியில் கிடைத்திருப்பது சங்ககாலத்தில் இருந்தே ரோமானியர்களுடன் இப்பகுதியினர் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தது உறுதிப்படுகிறது.

மேலும் ரோம் வர்த்தகர்கள் இங்கு தங்கிச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. இப்பகுதியில் நடைபெற்ற ஆய்வானது ரோமானியர்கள் தென்னகப் பரப்பில் எந்தெந்த பகுதிகளில் தொடர்பில் இருந்தார்கள் என்பதைக் காட்டும்படி அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் பல இடங்கள் ஆய்வுக்குக் காத்திருக்கின்றன. அவையும் தொடர்ச்சியாக அகழாய்வு செய்யப்பட்டால் ரோமானியர்கள் குறித்த புதிய வரலாற்று வெளிச்சத்திற்கு இடமுண்டு. இரவிமங்கலம் என்ற ஊர் பழனி அருகே 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 2000  ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இது 1000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. 200 ஏக்கரில் இந்தத் தொல்லியல் எச்சங்கள் மிக நெருக்கமாகவும், 300 ஏக்கரில் பரவலாகவும், 500 ஏக்கரில் சிதறியும் உள்ளன. பெருங்கற்கால சின்னங்களான புதைமேடுகள், கற்படுக்கைகள், கல்திட்டைகள், குத்துக்கல், நடுகல், கல்லரண், கல்வட்டம் எனஅனைத்து வகையான தொல்லியல் சின்னங்களும் ஒரு களஞ்சியம் போன்று இங்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இங்கு இரும்பு உருக்காலைகள், இரும்பு அச்சுகள் ஏராளமாக இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இதுவரை இங்கு எந்தத் தொல்லியல் ஆய்வும் நடைபெறவில்லை. செய்துங்க நல்லூர் வசவப்பபுரத்தில் முதுமக்கள் தாழிகள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆதிச்சநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் முதுமக்கள் தாழி, கிண்ணம் முதலானவை கிடைக்கப் பெற்றன. வசவப்பபுரம் பரம்பு பகுதியான இவ்விடத்தை அகழாய்வு மேற்கொண்டால் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் தொடர்ச்சியும் வட்டாரப் பண்பாட்டுத் தன்மைகள் பலவும் புலப்படும்.

சாயல்குடி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்காலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சாயல்குடியில் இருந்து சூரங்குடி செல்லும் பழைய மங்கம்மாள் சாலையில் தரைக்குடி அருகில் உள்ளது கொக்கரசன் கோட்டை . இங்கு தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய நிறுவனர் வே. ராஜகுரு, ஜெயசீலன், அற்புதராஜ் ஆகியோர் மேற்பரப்பு ஆய்வு செய்தனர். அப்பொழுது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்காலையின் உடைந்த பகுதிகள், இரும்புத் தாது, கழிவுப் பொருட்கள், கருப்பு, சிவப்பு, பழுப்பு நிற பானை ஓடுகள், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாய்த் தெய்வ உருவ பொம்மை, கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இரும்புப் பண்பாடு செழுமையாக நிலவியமைக்கான சான்றுகளும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் பல கிடைத்துள்ளன. இரும்புக் கருவிகள் செய்யும் தொழில் நுட்பத்தை அறிந்த இம் மக்களின் தொன்மையான வரலாற்றை அகழாய்வு செய்வதன் மூலமே வெளிக் கொண்டுவர முடியும்.

Leave a Reply

You must be logged in to post a comment.