நீரவ் மோடியின் வைர நிறுவனத்தைத் தொடர்ந்து, ‘துவாரகா தாஸ் சேத்’ என்ற மற்றுமொரு வைர நிறுவனமும் வங்கியில் ரூ.390 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பது அம்பலாகி இருக்கிறது.இதுதொடர்பாக, ‘துவாரகா தாஸ் சேத்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேர் மீது, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, தனது மனைவி ஏமி மோடி, சித்தப்பா மெகுல் சோஸ்கி உள்ளிட்டோருடன் சேர்ந்து, ரூ. 11 ஆயிரத்து 700 கோடி அளவிற்கு மிகப்பெரும் மோசடியை அரங்கேற்றினார். நாட்டின் இரண்டாவது பெரிய வங்கி என்று கூறப்படும் பஞ்சாப் நேசனல் வங்கியின் திவாலாகும் நிலைக்குத் தள்ளினார். தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கும் தப்பிச் சென்று விட்டார். முன்னாள் வங்கி அதிகாரிகளையும், நீரவ் மோடி நிறுவன ஊழியர்கள் சிலர யும் கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், நீரவ் மோடியைப் பிடிக்க இண்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.
மறுபுறத்தில் நீரவ் மோடியின் நிறுவனங்களில் சோதனை நடத்தி ரூ. 5 ஆயிரம் கோடிக்கான வைர நகைகளை பறிமுதல் செய்தும், ரூ. 500 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.நீரவ் மோடி மீதான விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ரோடோமேக் பேனா நிறுவன முதலாளி விக்ரம் கோத்தாரி ரூ. 3 ஆயிரத்து 695 கோடி அளவிற்கு வங்கிகளில் மோசடி செய்திருப்பது வெளியே வந்தது. சிபிஐ அதிகாரிகள் இவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தில்லியைச் சேர்ந்த வைர வியாபாரியும் ரூ. 389 கோடியே 85 லட்சம் அளவிற்கு கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.
தில்லியைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘துவாரகா தாஸ் சேத்’ இந்த வைர நிறுவனம், அரசு பொதுத்துறை நிறுவனமான ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் இருந்து நீண்டகால தவணைக் கடனாக பல கோடி ரூபாய்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்துள்ளது.துவரகா தாஸ் சேத் நிறுவனமானது வங்கியில் வழங்கப்படும் ‘லெட்டர்ஸ் ஆப் க்ரெடிட்’ சேவையின் மூலம் பிற நாடுகளில் தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த கற்களை போலியான முறையில் பரிவர்த்தனைகள் செய்ததை தற்போது வங்கி கண்டறிந்துள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாக வங்கியின் சார்பில் 6 மாதங்களுக்கு முன்பே முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அதிகாரிகளும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது, கடந்த 2012 முதல் 2017 வரையிலான ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தங்கம், வைரம் கொள்முதல் செய்வதாக பெற்ற வங்கிக் கடனில் பெரும் பகுதியை தங்களது தனிப்பட்ட கடனை அடைக்க இந்நிறுவனத்தார் பயன்படுத்திய உண்மை தெரியவந்தது.இதையடுத்து, ‘துவாரகா தாஸ் சேத்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் சாப்யா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் நிதி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.