“உண்மையெது பொய்யியெது
ஒண்ணும் புரியல
நம்ம கண்ண நம்மாலே
நம்ப முடியல”

இந்த அவநம்பிக்கைக்குக் காரணம் என்ன? போலிகளின் புறப்பாடு அதிகரித்திருப்பது தான். போலிகள் எல்லாக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்டக் காலத்தில் போலிகளைக் கண்டு மனம்நொந்து மகாகவி பாரதியார் “நடிப்புச் சுதேசிகன்” என்றொரு பாடலையே பாடியிருக்கிறார். “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி” என்றார் அவர். இந்தப் பாடலின் ஊடே. “சிந்தையில் கள்விரும்பி சிவசிவ” என்றிருக்கும் போலிச்சாமியார்களின் சித்திரத்தையும் பாரதியார் காட்டத்தவறவில்லை.

இன்றைக்கு இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. போலிச்சாமியார்கள் என்றொரு பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும். பிரேமானந்தா, நித்தியானந்தா, ஜக்கிவாசுதேவ், ராம்தேவ், உமாபாரதி, ரீதாம்பரா, யோகி ஆதித்யநாத் என்று அந்தப் பட்டியலை நீட்டலாம். இவர்கள் கள்ள மனதைக் காவிக்குள் மறைத்திருப்பார்கள். காலத்துக்கு ஏற்ப இவர்களின் போலிச் செயல்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கும். போலிகளின் அரசியல் சார்பு காரணமாக செயல்கள் வேறு வேறாக இருக்கலாம். நிலங்களைச் சுருட்டுவார் ஒருவர்; மலைகளை விழுங்குவார் இன்னொருவர்; மக்களைக் கூறுபோட்டு ரத்தம் குடிப்பார் வேறொருவர்; பெண்களை ஏமாற்றிக் காமலீலைகளில் ஈடுபடுவார் மேலும் ஒருவர். போலிச்சாமியார்களின் வருகையும் இருப்பும் கி.பி.21ஆம் நூற்றாண்டிற்கு மட்டும் புதிதல்ல. கி.மு. முதல் நூற்றாண்டிலும் இருந்தது பற்றித் திருக்குறள் எடுத்துச் சொல்கிறது. இவர்களின் எண்ணிக்கை அருகி இருக்கவில்லை. ஏராளமாக இருந்துள்ளது.

மனதுக்குள் மாசுபடிந்துகிடக்கும். ஆனால் வெளியே பேசும்போது நீராடி சுத்தபத்தமாக இருக்க வேண்டும் என்று உபதேசிப்பார்கள். இப்படி உள்ளொன்றும் புறம் ஒன்றுமாக வாழ்கின்ற போலிகள் பலர் என்கிறார் வள்ளுவர். (குறள் -278) இப்படிப்பட்ட வஞ்சகர்களை அடையாளம் காண மக்கள் தவறிவிடுகிறார்கள். அல்லது நம்பி மோசம் போகிறார்கள். மக்களை இவர்கள் ஏமாற்றலாம்; தனக்குள் இருக்கும் ஐம்புலன்களை இவர்களால் ஏமாற்ற இயலுமா? கண்ணும் (பார்வையும்) வாயும் (நுகரும்பொருட்கள்) மூக்கும் (வாசனைத் திரவியங்கள்) செவியும் (தனித்திருக்கையில் கேட்கும் ‘தலையணை மந்திரம்’ போன்றவை) உடலும் (ஆபரணங்கள் அணிவது, பெண்களை இச்சைப்படி நடத்துவது) இவர்களின் ‘ரகசிய’ செயல்களை இவை நன்கு அறிவதால் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்ளும் என்கிறார் வள்ளுவர் (குறள் – 271)போலிச் சாமியார்களைக் காணும் போது; அவர்கள் பற்றி செய்திகள் வரும் போது “பசுத்தோல்போர்த்திய புலிகள்” என்ற சொலவடைதான் நினைவுக்கு வரும்.

ஆனால் வள்ளுவர் மாற்றி யோசிக்கிறார். தன்னை அடக்கி – புலன் உணர்வுகளை அடக்கி – வாழமுடியாதவன் பெரியதவக்கோலம் பூண்டவனாகக் காட்டிக் கொள்கிறான். ஆனால் உண்மையில் அவன் யார்? அவன் எப்படி வெளிப்படுகிறான்? என்பதை வெளிச்சமிட பசு, புலித்தோலைப் போர்த்துக் கொண்டு தான் விரும்பும் புல்லைத்தின்று விடுகிறது என்கிறார். (குறள் – 273) துறவு என்பதும் பற்றற்ற நிலை என்பதும் மனம் சார்ந்த விஷயம். நெஞ்சத்தால் ஒருவர் துறவு வாழ்க்கையை மேற்கொள்ளாமல் துறவிபோல நடித்துக் கொண்டிருந்தால் அவரை எப்படி அழைப்பது? அவர்களைஇரக்கமற்றவர்கள் என்கிறார் வள்ளுவர். எவ்வளவு பொருத்தமானவார்த்தை! யாரிடமும் இரக்கமில்லை; பிள்ளைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கிறார்கள். சொத்துக்களை சுருட்டுகிறார்கள். இயற்கைவளங்களை சொந்த நலன்களுக்காக ஆக்ரமிக்கிறார்கள்! இவர்களை இரக்கமற்றவர்கள் என்று தானே சொல்ல வேண்டும். சொல்கிறார் தெளிவாக.

“நெஞ்சில் துறவார், துறந்தோர்போல்
வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்” (குறள் – 276)

மனிதர்கள் உடல் நிறத்தால் குணநலன் தீர்மானிக்கப்பட்ட/ படுகிற காலமும் உண்டு. ஆள் நல்லா சிவப்பா இருப்பான். வாய்வார்த்தைகள் இனிப்பா இருக்கும். ஆனால் மனமோ இதற்கு நேர்மாறானது. இதனை மக்கள்மொழியில் சுட்டிக்காட்டுவது போல் குத்திக்காட்டுகிறார். குன்றி மணி (மக்கள்வழக்கில் குண்டு மணி என்றும் சொல்வார்கள்) பெரும்பகுதி சிவப்பாய் இருக்கும். அதைப் போல் போலிச் சாமியார்கள் புறத்தோற்றத்தில் எல்லாமும் பொருந்தியிருப்பார்கள். ஆனால் அகம் எப்படி இருக்கும் என்றால் குன்றி மணியின் மூக்கு போல் கருத்துப் போய் இருக்கும் என்கிறார் வள்ளுவர் (குறள் -277)உண்மைத்துறவிகளுக்கும் போலிச்சாமியார்களுக்கும் பொருத்தமான இன்னொரு உருவகமும் திருக்குறளில் காட்டப்படுகிறது. அம்பு இருக்கிறதே அது நேராக நிமிர்ந்து இருக்கும்; அதைப்போல் சிலர் சாமியார் உடையில் ஞானிகளைப் போல் செம்மாந்து திரிவார்கள். வேறு சிலரோ யாழின் முன்பகுதி போல் வளைந்து இருப்பார்கள். கர்வம் இருக்காது; ஆணவம் தலைதூக்காது; மக்கள் நலனை நோக்கமாகக் கொண்டிருப்பார்கள். இப்போது எண்ணிப்பாருங்கள் அம்பு நேராக இருந்தாலும் அது உயிர்களை மாய்த்து வீழ்த்தும் கொடுமையைச் செய்வது. யாழின் முன்பகுதி வளைந்து இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் இசை மனதை அமைதிப் படுத்துவது; இனிமையாக இருப்பது.

எனவே உருவத்தைப் பார்த்து மதிப்பிடாமல் செயல்களை வைத்தே தீர்மானிக்க வேண்டும் (குறள் – 279) என்று ஆற்றுப்படுத்தும் வள்ளுவர் வாக்கும் கொள்ளத்தக்கது. அதனால் தான் உலகத்தாரால் பழிக்கத்தக்கவை என்கிற செயல்களைச் செய்யாமல் தவிர்த்து மனிதன் மனிதனாக வாழ்ந்தாலேபோதும். காவிஉடுத்தி தலைமழித்து அல்லது தாடிவளர்த்து மாறுபட்ட தோற்றத்தைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதில் (குறள் – 280) வள்ளுவர் உறுதியாக இருக்கிறார். போலிச்சாமியார்களின் சகவாசம் கூடாது என்பதற்கு எப்போதோ அடித்த எச்சரிக்கை மணி இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.