புதுக்கோட்டை, பிப்.25-
தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வாய் திறக்காதது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாவட்ட மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் ஞாயிற்றுக் கிழமையன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எங்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது. காவிரி நீர் உரிமையில் தமிழகத்தின் பங்கு வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்க வேண்டுமெனவும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்ற உத்தரவும் ஒருவகையில் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பாக உள்ளது. நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வரவிருக்கும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து வலியுறுத்துவது அல்லது தில்லிக்குச் சென்று வலியுறுத்துவது எனவும் முடிவெடுக்கப் பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைக்க பிப்ரவரி 24-இல் சென்னைக்கு வந்த பிரதமரிடம் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். ஆனால் பிரதமரோ காவிரி குறித்து வாய் திறக்காமல் மத்திய அரசின் திட்டங்களை பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பிவிட்டார்.மோடியின் இத்தகைய நடவடிக்கை தமிழக மக்களை வேதனையடையச் செய்துள்ளது. இது டெல்டா பகுதி விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல. சுமார் 20 மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையும் இதில் அடங்கியிருக்கிறது. இது வெறும் நதி நீர்ப்பிரச்சனை மட்டுமல்ல. தேசிய ஒருமைப்பாட்டின் பிரச்சனை என்பதையும் பிரதமர் மோடிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.நாட்டில் வகுப்புவாதத்தின் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் நேபாளத்தில் அமைந்துள்ள கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இறுதி யுத்தம் ஒன்று நடக்கும். அது வகுப்பு வாதிகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்குமானதாகவே இருக்கும். இவ்வாறு முத்தரசன் குறிப்பிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.