“தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் வழக்கத்தைவிட மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் பனி உறையவைத்தபோதிலும் 92 நாடுகளைச் சேர்ந்த 2,952 வீரர்கள் இரண்டு வார காலம் ஒலிம்பிக் கிராமத்திலேயே தங்கி பதக்க வேட்டை நடத்தினர்”

முதல் முறையாக….
23 ஆவது குளிர் கால ஒலிம்பிக் போட்டி இம்மாதம் 9 ஆம் தேதி முதல் 25 வரைக்கும் தென்கொரியா நாட்டின் பியாங்சாங் நகரின் அல்பென்சியா விளையாட்டு பூங்கா, காங்னியுங், போக்வாங், ஜியோங்சியான் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து, கனடா, சிலி, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, வடகொரியா உள்ளிட்ட 92 நாடுகள் பங்கேற்றன. ஈகுவடார், நைஜிரியா, கோசோவா, எரிட்ரியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகள் முதன் முறையாக பங்கேற்றன.

குதூகலம்!
101 நாடுகளில் பயணித்த ஒலிம்பிக் தொடர் ஜோதியை தென் கொரியா வீரர் பார்க் ஜோங் ஆ, வடகொரிய வீரர் ஜோங் சு ஷியான் ஆகியோர் இணைந்து தொடக்க விழா மண்டபத்திற்கு எடுத்து வந்தனர். துவக்க விழா அணி வகுப்பில் ஒருங்கிணைந்து ‘ஐக்கிய கொரிய’ தீபகற்பம் என்ற ஒற்றைக் கொடியின் கீழ் தென்கொரியா, வடகொரிய வீரர்கள் கூட்டாக அணி வகுத்த அந்த காட்சி அரங்கில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்டன. குறிப்பாக, தொலைக்காட்சிகளில் கண்டு களித்த இரு நாட்டு மக்களும் அன்றைய இரவை பண்டிகைப் போன்று குதூகலமாக கொண்டாடினர்.


 

பரவசம்!
ஒலிம்பிக் போட்டியின் கோலாகல துவக்க விழாவில் வண்ணமிகு வாண வேடிக்கை, பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சிகள் என களைக்கட்டின. தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்டோருடன் கிம் யோங்கும் பார்த்து பரவசமடைந்தார். ஒலிம்பிக் போட்டியின் ஐஸ் ஆக்கி விளையாட்டில் பெண்கள் பிரிவில் வட கொரியாவும் தென் கொரியாவும் ஒன்றாக இணைந்து ஒரே நாடாக களம் கண்டதையும் புகழ்ந்து தள்ளிய பல்வேறு ஊடகங்களும் ஏழு சாகப்தத்திற்கு வடகொரியா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்று புகழ்ந்து வருகிறது.

அரசு முறைப் பயணம்!
65 ஆண்டுகளுக்குப் பிறகு வடக்கிலிருந்து தெற்கிற்கு விஜயம் செய்தார் வடகொரியாவின் கிம் யோ ஜோங். 1950-53 கொரிய போருக்கு பின்னர், வடகொரிய ஜனாதிபதி குடும்பத்திலிருந்து தென் கொரியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றது இதுவே முதல் முறையாகும். கொரிய தீபகற்பத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தென் கொரியா துணை நிற்கிறது. தென்கொரியாவுக்கு வடகொரியா பல முறை எச்சரிக்கை செய்து வருவதோடு, பொருளாதார ரீதியாக கொரியாவை கைப்பற்ற நினைக்கும் அமெரிக்காவுக்கு சிறிய நாடான வடகொரியா பெரும் சவாலாக விளங்குகிறது.

போர் மேகங்கள்!
இந்த சூழ்நிலையில், 23 ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை தென் கொரியா ஏற்றுக்கொண்டது. இந்த போட்டிகள் நடைபெறும் ஒலிம்பிக் கிராமம் அமைந்திருக்கும் பியாங்சாங் நகர் வடகொரிய எல்லையிலிருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. கொரிய கடற்பகுதியில் எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்திருப்ப தால் வடகொரியா பங்கேற்காது, ஒலிம்பிக் கிராமத்தில் தங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்காது என்றெல்லாம் முதலாளித்துவ ஊடகங்கள் தென்கொரியாவுக்கு எதிராக வடகொரியாவை சித்தரித்து வந்தன.

மூக்குடைப்பு!
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ ஊடகங்களின் மூக்கை உடைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தென் கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது சகோதரி கிம் யோ ஜோங் தலைமையில் அரசு பிரதிநிதிகள், விளை யாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 230 பேர் அடங்கிய குழுவை கடல் வழிப் பயணமாக தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்தார். அப் பயணத்திற்கான ஏற்பாட்டில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. இதை சற்றும் எதிர்பார்க்காத முதலாளித்துவ ஊடகங்கள் விழி பிதுங்கி நின்றன.

அச்சாரம்!
அரசு முறைப் பயணமாக தென்கொரியாவுக்கு முதன் முறையாக வருகை தந்த வடகொரிய பயணக்குழுவை உற்சாகமாக வரவேற்ற தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், வடகொரிய ஜனாதிபதியின் சகோதரிக்கு பூங்கொத்து கொடுத்து கை குலுக்கினார். மேலும், தனது ‘நீல மாளிகை’யில் விருந்து அளித்தார். அதில், வடகொரிய அரசின் முக்கிய பிரமுகர்களுடன் ஜனாதிபதியின் சகோதரியும் பங்கேற்றது பரஸ்பர நட்புறவை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு இருநாடுகளின் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அச்சாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இந்நிலையில், இரு நாடுகளும் இணைவதற்கு ஒட்டுமொத்த கொரிய மக்களும் பாடுபடவேண்டும் என்று வடகொரியா அழைப்பு விடுத்திருப்பதும் நிறைவு விழாவில் வடகொரியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான கிம் யோங் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு கலந்து கொண்டதும் கடந்த 22 ஒலிம்பிக்கை காட்டிலும் இந்த ஒலிம்பிக் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.