மயிலேறும் பெருமாள் என்கிற தூத்துக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பெயரில் ஒரு பதிவு முகநூலிலும், வாட்சாப்பிலும் மிகப் பரவலாக பகிரப்பட்டுள்ளது.பகிர்ந்தவர்கள் காவல்துறையினரும், சங்பரிவார் அமைப்பில் சிலரும். இந்த பதிவில் பிப்ரவரி 20 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில மாநாட்டை ஒட்டி நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பிற்கு அனுமதி தரவில்லை என்றும் போலீஸ் வாகனத்தை செந்தொண்டர்கள் தாக்கினார்கள் என்றும் தங்களது பணியை செய்ய விடாமல் தடுத்தனர் என்றும் பலவாறாக உண்மைக்கு மாறான அவதூறுகள் அள்ளித்தெளிக்கப்பட்டு இருந்தன.

இதையொட்டி அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை.அதன்பிறகு காவல் கண்காணிப்பாளரிடம் இதற்கு உங்கள் அனுமதி உண்டா ?நாங்கள் அனுமதி பெறாமலா பேரணி நடத்தினோம் என்று கேட்ட போது அவர் இந்த செய்திக்கும் தங்களுக்கும் சம்மந்தமில்லை என்றும் மயிலேறும் பெருமாள் இத்தகைய விஷயங்களை பேசுவதற்கு அதிகாரம் படைத்தவர் அல்ல என்றும் தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட மயிலேறும் பெருமாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்து தனது வருத்தத்தைத் தெரிவித்ததோடு தனது முகநூல் பக்கத்தில் அந்தப் பதிவு தன்னுடையது அல்ல என்றும் பதிவிட்டுள்ளார். எந்த வித முன் யோசனையும் இன்றி செயல்பட்ட ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினம் தனது செயலை நியாயப்படுத்துவதற்காக நடத்தியுள்ள நமக்கு நாமே அவதூறு பிரச்சாரம் என்பது தெரியவருகிறது.

இதே போன்று சம்பவம் நடந்தது ஒரே இடமாக இருந்த போதும் இரண்டு காவல் நிலையங்களில் வெவ்வேறு எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.இந்த எப்.ஐ.ஆர் களில் தலைக் காயத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டிருந்தவர்கள் காவல் துறையினர் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற போது சிகிச்சைப் பெற்றுக்கொண்டு இருந்த செந்தொண்டர்கள் கம்புகளால் தங்களை தாக்கியதாக அதில் கூறப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் மருத்துவமனை வளாகத்திற்குள்ளும்,அவசர சிகிச்சைப் பிரிவிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளுன. அப்படியானால் இவர்கள் தாக்கப்பட்டது அந்த கேமராக்களில் பதிவாகியிருக்க வேண்டும்.காவல்துறை அதிகாரியைச் சந்தித்து சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.அவர்களால் அப்படி எதையும் காட்ட முடியாது.காவல்துறையினர் எத்தனை கீழ்த்தனமான செயலுக்கும் செல்வார்கள் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.அந்த எப்.ஐ.ஆர் களில் உள்ள முரண்பாடுகள் ஏராளம்.காவல் துறையினர் தங்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான ஒரு தாக்குதலை மறைப்பதற்காக பொய்யான தகவல்கள் கொடுத்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் தோற்றுப்போகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.