“பேராசிரியர் பிரபாத் பட்நாயக்”

இரண்டாம் உலகப் போர் முடிந்து அரை நூற்றாண்டுக்குப் பிறகும் பாசிசம் என்பது ஒரு தீவிர அரசியல் சக்தியாக எங்கும் இருக்கவில்லை. இருந்தாலும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில், பெரும்பாலும் சிஐஏ ஆதரவுடன் முற்போக்குத் தேசிய அரசாங்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலமாக பல கொலைகார ஆதிக்க அரசுகள், ராணுவ சர்வாதிகார ஆட்சிகள் ஏற்படுத்தப்பட்டு அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் நடைபெற்று வருவதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி விடும் வகையில் வெகுஜன அரசியல் அணிதிரளலை நம்பியிருக்கும் பாசிச ஆட்சிகளிடம் இருந்து இவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பிரதான போட்டி என்பது தாராளவாதத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையில் இருப்பதாகவே என் தலைமுறையினருக்கும், அடுத்த பல தலைமுறையினருக்கும் தோன்றுகிறது.

பாசிசம் இவ்வாறு மறைந்திருப்பதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். மனிதகுலத்தை அதனுடைய வரலாற்றில் மிகவும் அழிவுகரமான போருக்குள் தள்ளியதன்  மூலம் எழுந்த அதிருப்தி ஒரு காரணமாக இருந்தது. போரை உருவாக்கும் வகையில் தீவிரமான வெறித்தனம் கொண்டதாக பாசிசம் மக்களின் மனங்களில் பதிவாகி இருந்தது. பெருமளவிலான வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகியவற்றால் போருக்கு இடைப்பட்ட காலத்தில் பாசிசம் வளர்ந்தது இரண்டாவது காரணமாக இருந்தது. சமூக ஜனநாயகம் என்ற பெயரில் கெயினிசியன் “தேவைக்கான நிர்வாகம்” என்பது முதலாளித்துவ உலகிற்குள் நுழைந்து “முதலாளித்துவத்தின் பொற்காலம்” என்று அந்தக் காலம் அழைக்கப்பட்டது, பின்காலனித்துவ காலனித்துவச் சுரண்டலால் ஏற்பட்ட கொடுமைகளுக்குப் பிறகு பெரும்பாலான மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் சிறந்த வாழ்க்கையையும் கொண்டு வருவதாக, மூன்றாம் உலக நாடுகளில் கொண்டு வரப்பட்ட சமூகப் பொருளாதாரக் கொள்கைகளில் அரசாங்கக் கட்டுப்பாடு என்பது இருந்தது.

ஆனால் இப்போது பிந்தைய உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்வது இயலாததாக இருக்கிறது. ஆனால், இந்திய உதாரணம் இந்த நிலைப்பாட்டை நிறுவுவதாக இருக்கிறது. 1900களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு ஆளுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 200கிலோகிராம் என்றிருந்த உணவுப் பொருள் நுகர்வு, 1945-46இல் 136.80கிலோகிராமாக வீழ்ச்சியடைந்தது. 1980களின் இறுதியில் 180கிலோகிராம் என்று உயர்ந்து, பின்னர் புதிய தாராளவாத சீர்திருத்தங்களின் கீழ் இப்போது 165கிலோகிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது. பிகேட்டி, சான்செல் ஆகியோர் இந்திய வருமான வரி விவரங்களைப் பயன்படுத்தி, 1930களின் பிற்பகுதியில் மொத்த வருவாயில் 21 சதவீதப் பங்கு முதல் ஒரு சதவீத பணக்காரர்களிடம் இருந்ததாகவும், 1980களின் முற்பகுதியில் அது 6 சதவீதமாக வீழ்ச்சியடைந்து, 2014ஆம் ஆண்டில் 22 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் கணித்திருக்கின்றனர்.

முன்னேறிய மற்றும் வளர்ச்சி குன்றிய நாடுகளில் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து வந்த அரசாங்கக் கட்டுப்பாட்டை புதிய தாராளவாதம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்த பின்னரும், டாட்காம் உருவாக்கம், குமிழியாய் அமெரிக்காவில் ஏற்பட்ட வீட்டுவசதி ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சில காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள உதவின. அந்தக் குமிழி உடைந்த வேளையில், உலக முதலாளித்துவம் நீண்ட நெருக்கடி காலத்திற்குள் நுழைந்தது. தற்போது மறுமலர்ச்சி பற்றி பேசப்படுவதைப் போல. இதுபற்றித் தொடர்ந்து பேசப்பட்டும் வருகிறது, தரையிலிருந்து குதித்து எழும் பந்தின் உதாரணத்தை பயன்படுத்தி ஒருவர் சொன்னது போல், பந்து தரையை நோக்கி வீழும் போது அத்தகைய பேச்சுகள் நின்று விடுகின்றன. தற்போதைக்கு கிடைத்திருக்கும் புத்துயிர் கூட அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வருமானத்திற்கு அதிகமாக இருக்கும் நுகர்வு அதிகரிப்பை அடிப்படையாக கொண்டதாக இருப்பதால் நீண்ட காலத்திற்கு அது நீடிக்க முடியாது.

போர் இடைவெளிக் காலத்தில் இருந்ததைப் போல, உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி உலகமெங்கிலும் பாசிசத்தின் வளர்ச்சிக்கான புதிய தூண்டுதலை வழங்கியிருக்கிறது. மிக எளிமையான முறையில் இந்த விஷயத்தை அணுக முடியாது. உதாரணமாக ஜெர்மனியில் பாசிசம் பெற்றுள்ள சமீபத்திய வளர்ச்சி என்பது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியைக் குறிப்பதாகவே உள்ளது. அதன் விளைவுகள் ஜெர்மனியின் வேறு நெருக்கடிகளைக் காட்டிலும் மிகவும் குறைவான பாதிப்பையே ஜெர்மனியின் மீது ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் அமைப்பின் செயல்பாடுகளின் அடிப்படையில் இல்லாமல், ‘மற்றவர்கள்’ மீது குற்றம் சுமத்துவதன் அடிப்படையில் வெகுஜன அரசியல் அணிதிரட்டு என்பது இந்தியா உள்ளிட்டு பரந்த அளவில் அதிகரித்து வருகிறது.

பாசிச ஆட்சிகள் பல இடங்களில் அதிகாரத்திற்கு வரும் என்பதோ அல்லது எந்த இடத்தில் அவர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்களே அங்கே பாசிச அரசுகளை அமைப்பதில் வெற்றி பெற்று அதன் மூலம் அவர்களின் ஆட்சியை நிலைநிறுத்துவார்கள் என்பதோ இதற்கான பொருளல்ல. முந்தைய காலத்திய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மிஷல் கலெகியால் முன்வைக்கப்பட்ட பாசிசத்தின் கீழ் அடுத்த அரசாங்கம் இல்லை என்ற பிரபலமான கருத்து இப்போது உண்மையாக இருக்கப் போவதில்லை. சமகாலப் பாசிசம் என்பது இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என்பதே அதற்கான பொருள்.

பாசிசத்தை போருக்குப் பிந்தைய காலத்தில் மறைத்து வைத்திருந்த மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு காரணங்களும் தற்போது இல்லை. ஒரு போரின் மூலமாக மனிதகுலத்திற்கு பேரழிவைக் கொடுத்து தன்னைத்தானே சமகாலப் பாசிசம் அழித்துக் கொள்வதற்கான சாத்தியமும் இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி அல்லது லெனின் கூறியவாறு “ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டி” என்பது முடக்கப்பட்டு அவ்வாறாகத் தொடர்ந்து இருந்து வருவது தெளிவாகப் புலப்படுகிறது. நிதி மூலதனம் என்பது லெனின் காலத்தைப் போலல்லாமல், இப்போது சர்வதேச அளவில் செயல்படுவதாகவும், எல்லைகளைக் கடந்து பாயும் அதன் ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் இந்த உலகம் பலப்பல தனிப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதாகவும் இருப்பதே அதற்கான காரணமாக இருக்கிறது. டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு எதிராக கத்தியைத் தீட்டினாலும் (வடகொரியா பற்றிச் சொல்ல வேண்டியதில்லை) போர் என்பது உடனடியாக நிகழக் கூடியதாகத் தோன்றவில்லை. வரம்பிற்குட்பட்ட சில முரண்பாடுகள் நிகழும் போது, ​​இந்த நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாத பிற நாடுகளில் இருக்கின்ற பாசிசம் நம்பத்தகுந்ததாகவே இருக்கிறது.

இந்த நெருக்கடிகளுக்கு முந்தைய காலத்திற்கு, முதலாளித்துவத்தின் பொற்காலத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, திரும்புவதற்கான சாத்தியமே இல்லை. உண்மையில் தற்போதைய நெருக்கடிகள் ஏற்பட்டதற்கான நம்பகமான காரணங்களை தாராளவாதிகளால் கூற இயலவில்லை. பெரும்பாலான தாராளவாதிகள் இவ்வாறான நெருக்கடி என்ற ஒன்று இருப்பதாக ஒப்புக் கொள்வதற்கே வெட்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இந்த நெருக்கடி பற்றி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய டிரம்ப் அதற்காக “வெளிநாட்டவர்கள்” மீது குற்றம் சுமத்தி அவர்களுக்கு எதிராகக் குரோதத்தைத் தூண்டி விட்டார். அவ்வாறு நெருக்கடி எதுவும் இருப்பதை உணராத ஹிலாரி கிளிண்டனோ, அது குறித்து எதுவும் பேசவில்லை.

தங்களுடைய பெரும்பாலான வருமானத்தைச் செலவழிப்பவர்களாக இருக்கின்ற தொழிலாளர்கள் மீது வரிவிதிப்பது எவ்விதத்திலும் தேவையை அதிகரிக்கும் நிகர விளைவை ஏற்படுத்துவதாக இருக்காது. அரசு செலவினங்களின் மூலமாக மொத்த தேவைகளை அதிகரிப்பதற்கு, அரசால் செய்யப்படும் செலவினங்களை அது ராணுவத்திற்கானதாக இருந்தாலும், நிதி பற்றாக்குறையின் மூலமாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரி போடுவதன் மூலமாகவோ பெறுவது மட்டுமே சாத்தியமானது. உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனத்திற்கு பாதகமாக இருப்பதால் அரசு செலவினங்களுக்கான நிதியைப் பெறுவதிலிருந்து இந்த இருமுறைகளுமே புதிய தாராளவாதத்தால் விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறான அக்கறையைக் காட்டுவதில்  பாசிஸ்டுகளைவிட தாராளவாதிகள் எந்த விதத்திலும் குறைந்தவர்களாக இல்லை. பாசிஸ்டுகளை விட மிக அதிகமாக, உலகமயமாக்கப்பட்டுள்ள நிதியின் மீது சிறப்புரிமை காட்டுகின்ற புதிய தாராளவாதத்தை ஏற்றுக் கொள்பவர்களாக தாராளவாதிகள் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில், அதிகாரத்தில் இருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள் தாராளவாத காங்கிரஸைப் போலவே தாராளவாதத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பது இதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், புதிய தாராளவாத முதலாளித்துவம் நீடிக்கும் வரையிலும், பாசிசத்தின் நிரந்தரப் பிடியில் நாம் சிக்கிக் கொண்டவர்களாகவே இருப்போம். இது இந்த நடப்புக் காலத்தை ஆபத்தான காலமாக ஆக்கியிருக்கிறது. பாசிசம் என்பது பாசிச அரசை நோக்கி தள்ளும் போது, இந்த ஆபத்து தெளிவாகும். தேர்தல் விளையாட்டை விளையாடும் பாசிசம், வாக்குச்சீட்டின் மூலமாக அதிகாரத்தை விட்டு வெளியேற்றப்பட்டாலும், ஒரு மாற்றீடாக அது தொடர்வதன் மூலம் திரும்பவும் ஆட்சிக்கு வரும். படிப்படியாக ஆனால் நிச்சயமாக ஆட்சியமைப்பு முறை மற்றும் சமூகம் ஆகியவை பாசிசமாவதை நோக்கியே அது செல்லும்.

எனவே தாராளவாத முதலாளித்துவத்திற்குள் பாசிசம் இருப்பதை இல்லாமல் செய்வதற்கோ அல்லது ஓரம் கட்டிவிடுவதற்கோ எந்த வழியும் இல்லை. தன்னுடைய இறுதிக்கட்டத்தில் மீள முடியாத நெருக்கடிகளுக்குள் உலகப் பொருளாதாரத்தை தள்ளி, அதிலிருந்து தப்பிக்க இயலாத நிலைமையை ஏற்படுத்துகின்ற இந்த பாசிசம் மனிதகுலத்திற்கு புதிய தாராளவாத முதலாளித்துவம் அளித்திருக்கின்ற பரிசாக உள்ளது.  இந்த புதிய தாராளவாத முதலாளித்துவத்தை மீறுவதே பாசிசத்தைக் கடந்து செல்வதற்கான ஒரே வழி. சோசலிச மாற்றை நோக்கி முன்னேறுவதன் மூலம் இடதுசாரிகளால் இதைச் செய்ய முடியும், ஆனால் தாராளவாதம் கொண்டவர்களை வென்றெடுப்பதன் மூலமே அது சாத்தியப்படும். புதிய தாராளவாத முதலாளித்துவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பொருளாதார வேலைத்திட்டத்தை வலியுறுத்துவதோடு, பாசிசத்துக்கு எதிராக தாராளவாத அரசியல் சக்திகளுடனான புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். மூலதனம் பாய்வதைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தற்போதைய உலகமயமாக்கலில் இருந்து ஓரளவிற்குத் தள்ளி தனித்து நிற்க வேண்டும். தங்களிடம் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்களைக் கலைந்து, தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இடதுசாரிகள் இயங்க வேண்டும்.

 நன்றி: https://www.telegraphindia.com/opinion/dangerous-period-208856

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு
விருதுநகர்

Leave a Reply

You must be logged in to post a comment.