இந்திய வங்கித்துறையின் வரலாற்றில் முன்னெப்்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் வெட்கங்கெட்ட முறையிலும் அதிர்ச்சியளிக்கக்கூடியவிதத்திலும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரும்அளவில் மோசடி நடந்திருக்கிறது. இந்தியாவின்பணக்காரர்கள் வரிசையில் 85ஆவது நபராக இருக்கக்கூடியபேர்வழியான நீரவ் மோடியும் அவரது மாமா மொகுல்சோக்சி என்பவரும் வங்கி அதிகாரிகளுடன் கூட்டுச்சதி செய்து,பலமுறை போலி புரிந்துணர்வு கடிதங்களைப் பெற்று 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிப்பணத்தை மோசடியாகக் கையாடல் செய்திருக்கின்றனர்.2011ஆம் ஆண்டிலேயே துவங்கிய இவர்களின் மோசடி, இப்போது 2017இல் மோடியின் ஆட்சியில் உச்சத்திற்கு வந்திருக்கிறது. மோடியின் புதிய இந்தியாவில் “வணிகத்தை எளிதாகச் செய்வது” என்கிற முழக்கத்தின் பொருள் இதுதானோ?

மோடியின் நிகழ்ச்சியில்…

மோடி அரசாங்கத்தின்கீழ் நிலைநிறுத்தப்பட்டுள்ள உத்திகளின்படி, நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தால் (சிபிஐ-ஆல்)அவர்கள் ஈடுபட்ட கிரிமினல் நடவடிக்கைகள் தொடர்பாகப் புலன்விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாகவே, ஜனவரி முதல்வாரத்திலேயே, இந்நாட்டை விட்டு மிகவும் சௌகரியமானமுறையில் வெளியேறிவிட்டார்கள். இதேபோன்றுதான் லலித் மோடி மற்றும் விஜய் மல்லையாஆகியோரின் வழக்குகளிலும் நடைபெற்றன. இதில் மிகவும் கபடத்தனமான செயல் என்னவென்றால், இவ்வாறுமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ள நீரவ் மோடி, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ்நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியுடனும் இதரஇந்திய வர்த்தகப் பிரமுகர்களுடனும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் என்பது அதோடுமுடிந்துவிடவில்லை. அது பல வங்கிகளில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் இது வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டுள்ள ஒரு தரவின்படி, 2017 மார்ச் 31உடன் முடியும்கடந்த ஐந்தாண்டுகளில், 8,670 வழக்குகளில் 612.6 பில்லியன் (61ஆயிரத்து 260 கோடி) ரூபாய் அளவிற்கு ‘கடன் மோசடி’ நடைபெற்றிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கறார் விதிமுறைகள் கை கழுவப்பட்டது

வங்கித்துறையில் தாராளமயம் மற்றும் வங்கிகள் எப்படியாவது இலாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக அனைத்துவிதமான நெறிமுறைகளையும் மீறிஅளிக்கப்பட்டுள்ள உத்தரவுகளும் இவ்வாறு கடுமையான பாதிப்புகளை உருவாக்கி இருப்பதையே நடைபெற்றுள்ள ஊழல்கள் காட்டுகின்றன. வங்கிகள் சமீப காலத்தில் மேற்கொண்ட அதிவேகமான தாராளமய நடவடிக்கைகள் இடர்மிகுந்த முதலீடுகளை ஏற்பதற்கும், அவை வழக்கமாக மேற்கொள்ளும் நுண்ணிய கறாரான விதிமுறைகளை கைகழுவுவதற்கும் இட்டுச் சென்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ளதுபோலவே பல வங்கிகளிலும் ஊழல்கள் நடைபெற்றிருப்பதற்கு, அடிப்படையான காரணம் ஆட்சியாளர்கள் பின்பற்றும் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் என்று கூறுவதற்குப் பதிலாக, நவீன தாராளமயக் கொள்கையைத் தூக்கிப்பிடித்திடும் பேர்வழிகள் இப்போதுதங்களுக்கு கடன்கள் வழங்கிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளையும், பொதுத்துறை வங்கிகளையும் தாக்கத் துவங்கியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட வேண்டும் என்றும் குரல்எழுப்பத் துவங்கியுள்ளனர். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், வங்கிகளில் ஊழல் நடைபெறுவதைத் தவிர்த்திட, அவற்றின்மீது தனியாரின் பங்களிப்பினைஅதிகரித்திட வேண்டும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.

தனியார் வணிக வங்கிகளின் செயல்பாடுகள்…

இவ்வாறு கூறுபவர்கள் கடந்த காலங்களில் தனியாரிடம் இருந்த வணிக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்வது நலம் பயக்கும். சுதந்திரம் பெற்றபின் 1969வரை செயல்பட்டுவந்த 559 தனியார் கமர்சியல்வங்கிகள் தகர்ந்து தரைமட்டமாகின. இதன் காரணமாக அவற்றில் முதலீடு செய்திருந்த சேமிப்பாளர்கள்நிலை அதோகதியானது. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டபின்னர், மிகவும் பரிதாபகரமான முறையில் தோல்வியைச் சந்தித்த 25 தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டன. இதில், “புதிய தலைமுறை தனியார் வங்கி” என்றுகூறப்பட்ட தி குளோபல் டிரஸ்ட் வங்கியும் அடக்கம்.வங்கி ஊழல்களுக்கு மூலக் காரணம், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவதேயாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் ஆய்வுசெய்திடும் துறை(இன்ஸ்பெக்ஷன் டிபார்ட்மெண்ட்) இதுகுறித்து வாயைத் திறக்காமல் மவுனம் சாதிக்கிறது. வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFCs-Non-Banking Financial Companies)சுயமாகவே சான்றிதழ்கள் கொடுப்பது அனுமதிக்கப்பட்டன. இவை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று விதி இருந்தாலும், இவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது என்பது நடைமுறையில் பெயரளவில்தான் இருந்தன.

சுக்குநூறான மோடியின் வீறாப்பு

வங்கித்துறையில் நிலவிவந்த போட்டிச்சூழலானது எப்படியாவது இலாபம் ஈட்டவேண்டும் என்கிற குறிக்கோளுடன் பல பொதுத்துறை வங்கிகளை, நுண்ணிய முறையில்ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாது, இடர்மிகுந்த வழிகள்பலவற்றை மேற்கொள்வதற்கு உந்தித்தள்ளின.மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ள ரபேல் போர்விமானங்கள் வாங்கியது தொடர்பான பேரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் மறைத்திருப்பதைத் தொடர்ந்து, இப்போது நீரவ் மோடி மற்றும் மொகுல் சோக்சி ஆகியோரின் கையாடல்களும் சேர்ந்து ஊழலற்ற ஆட்சியை அளித்திடுவோம் என்கிற மோடி அரசாங்கத்தின்வீறாப்பை சுக்குநூறாக்கி இருக்கிறது. நீரவ் மோடியும், மொகுல் சோக்சியும் பாஜகவின் தலைவர்கள் சிலருக்கு மிகவும் வேண்டியவர்கள் என்பது பலருக்குநன்கு தெரியும். இந்த அரசாங்கத்தால் மிகவும் பயனடைந்துவரும் அனில் அம்பானிக்கு இவர்கள் மிகவும் வேண்டியவர்கள். சலுகைசார் முதலாளித்துவமும் ஊழல் அரசியல்வாதிகளுடன் அதற்குள்ள பிணைப்பும் நாட்டில் செயல்படா சொத்துக்கள் மற்றும் வங்கித்துறையின் நெருக்கடிக்கு மூலவேர்களாகும்.

People’s Democracy

(பிப்ரவரி 21, 2018) தமிழில்: ச.வீரமணி

Leave A Reply